கோவை, தொண்டாமுத்தூர் அருகே நல்லூர்பதி பழங்குடிகள் மலை கிராமம் உள்ளது. இந்நிலையில் இங்கு வசித்து வரும் குஞ்சம்மாள் மூதாட்டியின் வீட்டிற்குள் நேற்று இரவு ஒற்றை கொம்பு யானை உள்ளே புகுந்தது.
தொடர்ந்து யானை வீட்டின் கூரையை பிரித்து பந்தாடியது. அதனைப் பார்த்த அங்குள்ள ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். அதில்
“ஐயோ … உள்ளே போ … உள்ளே போ .. என கத்தி கூச்சலிடுகின்றனர்.
” அப்போது அங்கு இருந்த ஒரு ஆடு பரபரப்பாக ஓடியது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. மேலும் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை.
இந்நிலையில், ரோந்து பணியில் இருந்த வனத்துறையினர் யானையை விரட்டி வனத்திற்குள் அனுப்பினர். வறட்சி காலங்களில் யானை ஊருக்குள் உலா வரும் நிலையில், தற்போது மழைக் காலங்களில் யானை ஊருக்குள் உலா வருவது பொது மக்களுடைய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
யானை ஊருக்குள் வராதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழங்குடிகள் மற்றும் கிராமப்புறத்தைச் சார்ந்தவர்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.



