விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் நலன் சேர்க்கும் வகையில் வேளாண் துறைக்காக தனி நிதிநிலை அறிக்கையை ‘திராவிட மாடல்’ அரசு தாக்கல் செய்து வருகிறது. மூன்றாம் ஆண்டாக வேளாண் பட்ஜெட்டை நேற்றைய தினம் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருக்கிறார்.
நடப்பாண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் முன்பு தமிழ்நாடு முழுவதும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், முன்னோடி விவசாயிகள், வேளாண்துறை வல்லுநர்களின் கருத்துக்களை நேரடியாக கேட்டறிந்ததோடு, கருத்துக் கேட்புக் கூட்டங்களில் தெரிவித்தக் கருத்துக்களை உள்வாங்கி அவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் நிதிநிலை அறிக்கையை நமக்குத் தந்திருக்கிறார், வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
வெப்பத்தில் உழைத்திடும் விவசாயிகளை தொழில்நுட்ப உலகத்திற்கு அழைத்து செல்லும் வகையில் இந்த நிதி நிலை அறிக்கையை அவர் தயாரித்தளித்து இருக்கிறார். இது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
வேளாண்மைக்காக 38,904 கோடி ரூபாயை ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. வெளிநாட்டு வேளாண் தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொண்டு, நமது மாநிலத்தில் பின்பற்றும் வகையில் விவசாயிகள் வெளிநாட்டில் பயிற்சி பெற ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு, உலக சந்தையில் தேனி மாவட்ட வாழைக்குத் தனி அடையாளம் உருவாக்கிட ரூ.130 கோடியில் வாழைக்கான தனி தொகுப்பு திட்டம், கல்வித்துறையுடன் இணைந்து பண்ணை சுற்றுலா செயல்படுத்த ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு, பனை சாகுபடியினை ஊக்குவிக்க, பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு, விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் மற்றும் வாடகை மையங்கள் உள்ளிட்டவைக்கு ரூ.125 கோடி நிதி ஒதுக்கீடு, அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, மூலனூர் குட்டை முருங்கை உள்ளிட்ட 10 பொருள்கள் அகில உலக உளவில் புவிசார் குறியீடு பெற நடவடிக்கை, 3 மற்றும் 4 கிராமங்களுக்கு ஒரு வேளாண் விரிவாக்க அலுவலர் நியமனம், விவசாயிகளுக்குச் சாகுபடி தொழில் நுட்பங்கள், வானிலை முன்னறிவிப்புகள் போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க வாட்ஸ்அப் குழு அமைக்கப்படும் என அடுக்கடுக்கான அறிவிப்புகள், திட்டங்கள் அடங்கிய வேளாண் பட்ஜெட் என்றால் மிகையாகாது. இந்த நிதிநிலை அறிக்கையில் இயற்கை மணக்கிறது எனலாம்.
மிக முக்கியமாக அன்றாட உணவுத் தேவைகளான தக்காளி, வெங்காயம் ஆகியவை சீராக கிடைத்திட சிறப்பு நிதி ஒதுக்கியிருப்பது இந்த நிதி நிலை அறிக்கையின் நோக்கத்தை கோடிட்டு காட்டுகிறது. இதனை மொத்தத்தில் விவசாயிகள் மட்டும் இன்றி அனைத்து தரப்பினரும் வரவேற்கின்றனர்.
வைகோ, முத்தரசன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் வேளாண் பட்ஜெட்டை புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள். வெயிலில் வியர்வை சிந்த உழைத்திடும் விவசாயிகளை தொழில்நுட்ப உலகத்திற்கு அழைத்து செல்லும் வகையில் இந்த நிதி நிலை அறிக்கை அமைந்துள்ளதாக கூறியிருக்கிறார்கள்.
வழக்கம் போல எதிர்க்கட்சி தலைவர்களான எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், அண்ணாமலை, ஜி.கே.வாசன் போன்றோர் மட்டும் பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லாதது போல கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.
ஆனால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு விவசாயிகள் அனைவரும் மேலும் ஒருசில கோரிக்கைகளை அரசின் பார்வைக்கு சொல்லியிருக்கிறார்களே தவிர வேளாண் பட்ஜெட்டை வரவேற்று மகிழ்ச்சியைப் பகிர்ந்து வருகின்றனர்.
அறிவித்த திட்டங்கள் அனைத்தும் செயலாக்கம் பெறும்போது விவசாயிகளின் வாழ்வில் வளம் கொழிக்கும், மகிழ்ச்சி தாண்டவமாடும் என்பதில் ஐயமில்லை.
திராவிட மாடல் ஆட்சியை செம்மையாக நடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று முன்தினம் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பொது பட்ஜெட் தாக்கல் செய்து மகுடம் சூட்டினார்.
வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து அந்த மகுடத்தில் கோஹினூர் வைரத்தேயே பதித்து விட்டார், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!



