தமிழ்நாட்டில் முதல்வராகப் பதவியேற்ற அன்று முதல் மாற்றத்தைத் தனது பெயரிலிருந்து தொடங்கினார் மு.க.ஸ்டாலின். அதற்கு முன்பு வரை உலகம் முழுவதும் இருந்த தமிழர்கள் அவரை மு.க.ஸ்டாலின் என்றே அறிந்து வைத்திருந்தனர்.
ஆனால், 2021 மே 7 ம் தேதி ஆளுநர், அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கும் போது ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ என்று உச்சரித்தார். இந்தப் பெயர் உச்சரிப்பே எதிர்க்கட்சியினர் பலரை உற்றுப் பார்க்கவைத்தது. அதேபோல் அவரது கட்சியினரும் அதுவரை இல்லாத உற்சாகத்தைப் பெற்றனர்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவிகள் என அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும் பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் இலவசமாகப் பயணிக்கலாம் என உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு கடந்த ஒன்றரை ஆண்டுக்கால திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் தலையெழுத்தையே மாற்றும் சக்திவாய்ந்த திட்டமாக விளங்கிவருகிறது. இன்றைக்குப் பெண்கள் இலவசமாகப் பயணிக்கும் பேருந்தைத் தமிழக மக்கள் ‘ஸ்டாலின் பஸ்’ என்று அடைமொழி போட்டு அழைக்கும் அளவுக்குக் கடைக்கோடி மக்கள் வரை போய்ச் சேர்ந்துள்ளது. இன்னும் சில நாட்களில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் அறிவிக்கவிருக்கிறார்.
இவைபோன்ற திட்டங்களை செயல்படுத்தி தமிழர்கள் மனதில் நீங்கா இடத்தைப்பெற்ற மு.க.ஸ்டாலின் நாட்டிலேயே முதன்மையான முதலமைச்சர் என்ற மகுடத்தைச் சூட்டிக் கொண்டாடப்படுகிறார். நம்பர் 1 மாநிலமாக தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது.
அது மட்டுமா? தனது ஆட்சிக் காலத்திற்கு முன்கூட்டியே ஒரு பெயரை முடிவுசெய்து அறிவித்தார் மு.க.ஸ்டாலின். அவர் அறிவித்த ‘திராவிட மாடல்’ ஆட்சி என்ற சொல் இந்திய அளவில் அரசியல் வட்டாரங்களில் ஒரு அதிர்வை உண்டாகியது.
இந்த சாதனைகளுக்கு நடுவே முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழினத் தலைவராக தலைநிமிர்ந்து செயலாற்றும் அவருக்கு தமிழ்நாடே வாழ்த்து கூறிக் கொண்டிருக்கிறது. அனைத்துக்கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள், தொண்டர்கள் என அனைத்துத் தரப்பினரும் வாழ்த்துமழை பொழிந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து, திருநங்கையர்களுக்கான மாதாந்திர உதவித் தொகை ரூ.1,500 ஆக உயர்வு உள்ளிட்ட ஏற்றமிகு 7 திட்டங்களை தொடங்கிவைத்து தமிழ்நாடு மக்களுக்கு பிறந்தநாள் பரிசாக அளித்துள்ளார். அவரை வாழ்த்துவதே அனைத்துத் தமிழர்களின் இன்றைய முதல் பணியாக… முக்கிய பணியாக அமைந்து விட்டது.
தமிழ்நாட்டையே வாழவைக்கும் தலைவரை வாழ்த்துவதை விட, அவரிடம் நல்லாசியை விட வேறு என்ன பணி இன்றைய தினம் நமக்கிருக்கிறது?
பல்லாண்டு வாழ்ந்து தமிழ்நாட்டுக்கும் அனைத்து தமிழர்களுக்கும் தொடர்ந்து தொண்டாற்றிட வேண்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மனதார வாழ்த்துவோம்!