தமிழகத்திற்கும் கர்நாடகா, ஆந்திரா போன்ற தென் மாநிலங்களுக்கும் தினமும் வட மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் ஈசல் போல படையெடுத்து வந்தவண்ணம் இருக்கிறார்கள்.
சென்னை, பெங்களூரு, கோவை போன்ற பெருநகரங்கள் முதல், குக்கிராமங்கள் வரை அவர்கள் ஊடுருவி விட்டார்கள். பெரிய நிறுவனம் என்றாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி, அங்கிங்கெனாதபடி எங்கும் வேலை செய்கிறார்கள்.
ஒரு சிறு டீக்கடையை எடுத்துக் கொண்டாலும் கல்லாவில் இருப்பவரைத் தவிர, பலகாரங்கள் போடுவது, டீ போடுவது, கிளாசுகளை கழுவுவது வரை அவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
அவர்கள் கடும் உழைப்பாளிகள். மறுப்பதற்கு இல்லை. ஆனால் அதற்கு இணையாக உழைக்கத் தெரிந்த நம்மவர்கள் என்ன ஆனார்கள்? சோம்பேறி ஆகி விட்டனர். விளைவு நாம் செய்யவேண்டிய வேலைகளை, வடமாநிலத்தார் வந்து செய்கிறார்கள். கல்லாவை நம்மிடம் இருந்து அவர்கள் கைப்பற்றாமல் இருந்தால், சரி.
இந்தப்போக்கு தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல. தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் சோம்பேறித்தனத்தை ஓரங்கட்டி வைத்து விட்டு இந்த வேலையைத்தான் செய்வேன், அந்த வேலையைச் செய்ய மாட்டேன்
என்று முறுக்கிக் கொள்ளாமல் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு இணையாக கடுமையான உழைப்பை வழங்கிட, தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழர்களுக்கு பணி செய்ய முன்னுரிமை கொடுப்பதற்கு சில முதலாளிகள் முன்வந்து இருக்கிறார்கள். வட மாநிலத்தவர்களும் நம் இந்தியத் தோழர்கள் தான். ஆனால் எந்த தொழிலை எடுத்தாலும்…எங்குபார்த்தாலும் வடமாநிலத்தவர்கள் ஆக்கிரமிப்பு அதிகரித்து, தமிழர்கள் எண்ணிக்கை குறைவது ஒருபோதும் சரியாகாது; ஏற்கவும் முடியாது.
அரசுப் பணிகளிலும் பொதுத்துறை நிறுவன வேலைகளிலும் தமிழர்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கிறது. அதேநேரத்தில் முறைசாரா தொழிலாளர்கள் எண்ணிக்கையில் தமிழர்களை விட வட மாநிலத்தவர்களே அதிகமாக இருக்கின்றனர்.
வடமாநிலத்தவர்கள் வருகையால் சில வேலைகள் செம்மையாக நடந்தாலும் அவர்களால் தொல்லைகளும் ஏற்படுகிறது. சமீப காலமாக தமிழ்நாட்டில் குற்றச் செயல்களில் அதிகமாக ஈடுபடுவது வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான் என அறியப்படுகிறது.
வழிப்பறி, கொள்ளை, ரயில்களில் ஓசி பயணம் மேற்கொள்வதோடு சாதாரண பெட்டி பயணத்திற்கு டிக்கெட் வாங்கிக் கொண்டு ஏசி பெட்டிகளில் ஏறி பயணிகளுக்கு இடையூறு செய்வது என சட்டவிரோதச் செயல்களை அச்சம் இல்லாமல் செய்கிறார்கள்.
தென்மாநிலங்களை நோக்கி குறிப்பாக தமிழ்நாட்டிற்கு வட மாநிலத் தொழிலாளர்கள் வருவது அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டு மண்ணின் மைந்தர்களுக்கே அனைத்து தொழில்களிலும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரப்பட வேண்டும்.
வட மாநிலங்களில் இருந்து எத்தனை பேர், எத்தனை குடும்பத்தினர் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர் என்பதை கணக்கெடுக்க வேண்டும். அதற்கேற்ப தமிழ்நாட்டு தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை நிலை நாட்டுவதிலும் மீட்டெடுப்பதிலும் தமிழ்நாடு அரசு முழு கவனம் செலுத்த வேண்டும்!