கிராம மற்றும் பழங்குடியினர் சமூகங்களுக்கு உயிர் காக்கும் சிறுநீரக சிகிச்சை சேவைகளை மேம்படுத்துவதற்காக, டிஎம்பி அறக்கட்டளை (TMB Foundation) நிறுவனம் கோவை காருண்யா மருத்துவமனையுடன் இணைந்து செயல்படுகிறது.
காருண்யா நகர் மற்றும் சிறுவாணி பழங்குடியினர் மலைப்பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு தரமான சுகாதார சேவைகள் கிடைப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. அருகிலுள்ள நகரமான கோவை சுமார் 90 நிமிட பயண தூரத்தில் இருப்பதால், டயாலிசிஸ் நோயாளிகள் கடுமையான உடல், பொருளாதார மற்றும் மன அழுத்தங்களை எதிர்கொள்கின்றனர்.

இந்த முக்கிய இடைவெளியை நிரப்புவதற்காக, டிஎம்பி அறக்கட்டளை நிறுவனம் இரண்டு உயர் தொழில்நுட்ப டயாலிசிஸ் இயந்திரங்களையும், முழுமையாக சீரமைக்கப்பட்ட ஆம்புலன்ஸையும் காருண்யா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் நிறுவனம் வழங்கும் மருத்துவ சேவைகளுக்கு நன்கொடையாக அளித்துள்ளது.
இதன் மூலம் பயண சுமைகள் குறைக்கப்பட்டு, தகுந்த நேரத்தில் சிகிச்சை கிடைக்கச் செய்து, பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உடல்நலன் மேம்படுகிறது.
இந்த நிகழ்வில், டிஎம்பி அறக்கட்டளை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் எம்.முத்தையா மற்றும் டிஎம்பி கோவை பிராந்திய மேலாளர் டி.எர்னெஸ்ட் வசீகரன் ஆகியோர், ஆம்புலன்ஸ் மற்றும் டயாலிசிஸ் இயந்திரங்களை காருண்யா பல்கலைக்கழகத்தின் நிதி அதிகாரி ஜோசப் அமல்ராஜ் மற்றும் கருண்யா மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் சாம் ஆகியோரிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தனர்.
நிகழ்வில் பேசிய டாக்டர் முத்தையா, கிராம மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் சுகாதார இடைவெளிகளை நீக்கும் டிஎம்பி அறக்கட்டளை நிறுவனத்தின் அர்ப்பணிப்பை வலியுறுத்தினார்.
மேலும் “எந்த நோயாளியும் தூரம் அல்லது வசதிகள் இல்லாமை காரணமாக அத்தியாவசிய சிகிச்சையை இழக்கக் கூடாது என்பதே எங்கள் நோக்கம். காருண்யா பவுண்டேஷனுடன் இணைந்த இந்த கூட்டாண்மை, மிகவும் தேவையான சமூகங்களுக்கு சேவை செய்வதற்கான எங்கள் கூட்டு பணி நோக்கத்தை வலுப்படுத்துகிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
கிராம மற்றும் பழங்குடியினர் சுகாதாரத்தை வலுப்படுத்தும் இந்த முயற்சி, தமிழ்நாடு முழுவதும் டிஎம்பி அறக்கட்டளை நிறுவனத்தின் தொடர் சேவைகளில் மற்றொரு முக்கிய மைல்கல்லாகும்.



