fbpx
Homeதலையங்கம்உச்சநீதிமன்றம் செல்வாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்?

உச்சநீதிமன்றம் செல்வாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்?

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பா.ஜ.க, ஜனநாயக வழிமுறையான தேர்தல்மூலம் ஆட்சியைப் பிடிக்க முடியாதபோது, ‘குதிரை பேரம்‘ நடத்துவது, ஆளுங்கட்சியை உடைப்பது, சில விபீடணர்களை உருவாக்கி ஆட்சியைக் கவிழ்ப்பது போன்ற மக்களாட்சி மாண்புகளைச் சீரழிக்கும் வேலையில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பாஜகவின் இந்த சித்து விளையாட்டுகளை கனகச்சிதமாக அரங்கேற்ற, ஆளுநர்கள் அரசியல் பகடைக்காய்களாக மாறி உதவிடும் நிலை உருவாகி உள்ளது. இது நாட்டின் ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல; ஆபத்தானது.

ஆளுநர்களும், தங்களுக்குள்ள அதிகாரம் ஏதோ வானளாவியதுபோல எண்ணிக் கொண்டு, மக்கள் பிரதிநிதிகளால் ஆன சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிடும் மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் தராமல், எல்லையற்ற காலம் கிடப்பில் போடுவது, பல்கலைக்கழக வேந்தர் ஆளுநர் தான் என்பதை மாற்றும் திருத்தச் சட்டங்களைக்கூட நிறுத்தி வைத்து, ஒரு போட்டி அரசு நடத்துவது, சட்டமன்றத்தினை நடத்திட தேதி தராமல், இழுத்தடிப்பது போன்ற அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கைகளை பகிரங்கமாய் செய்து, மேலிடத்தின் நம்பிக்கைக்கு பாத்திரமாவதற்காகவே அரசியல் செப்பிடு வித்தைகளை நடத்தி வருகின்றனர்.

இது சம்பந்தமாக உச்சநீதிமன்றம் தொடர்ந்து பல வழக்குகளில் அவ்வப்போது சுட்டிக்காட்டி குட்டுவதையும் ஆளுநர்கள் கண்டுகொள்வதில்லை.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளுங்கட்சியான சிவசேனா கட்சியைப் பிளவுபடுத்தி, அங்கே நடந்த சிவசேனா, -காங்கிரஸ், – தேசிய வாத காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து, அதில் பிரிந்த ஒருவர் தலைமையில் – ஆளுநரின் ஆணைக்கிணங்க நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் (அதுவும் நள்ளிரவில்) ஓர் ஆட்சி வர ஆளுநர் செய்த அரசியல்பற்றி- உச்சநீதி மன்றத்தின் அரசமைப்புச் சட்ட அமர்வு இடித்துச் சுட்டிக்காட்டித் தீர்ப்பு தந்துள்ளது.

அதுபோலவே, தெலங்கானா சட்டப்பேரவைப் பிரச்சினை; ஆளுநர் செய்யும் அரசியல் பற்றி வருகிற 20 ம் தேதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. உச்சநீதிமன்றம் இடித்துரைத்தும் தமிழ்நாட்டு ஆளுநர் அதை கவனத்தில் கொண்டாரா என்றால்… இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

45 பேரை பலிகொண்ட ஆன்-லைன் சூதாட்டத்திற்குத் தடை என்ற உயிர் காக்கும் தடுப்பு மசோதாவைக் கூட 142 நாட்கள் வைத் திருந்து, இப்படி ஒரு மசோதாவை நிறைவேற்ற சட்டமன்றத்திற்கு அதிகாரம் இல்லை எனக் கூறி, காலந்தாழ்ந்து திருப்பி அனுப்பியது ஒன்றே அதற்கு அத்தாட்சி. ம

சோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காவிட்டால் தமிழ்நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்ற வாதத்தை கூட ஆளுநர் ஏற்க மறுப்பது நியாயமா?

முதலில், ஆன்லைன் சூதாட்டத் தடைக்கான அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் எப்படி ஒப்புதல் கொடுத்தார்? அப்படி ஒப்புதல் கொடுத்துவிட்டு, அதே பிரிவுகளைக் கொண்டிருக்கக்கூடிய நிரந்தர சட்டத்திற்கு உரிமையில்லை, மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று இப்பொழுது சொல்கிறார் என்றால், முதலில் அவசரச் சட்டத்திற்குத் தெரியாமல் ஒப்புதல் கொடுத்துவிட்டாரா? அப்படி என்றால், அது தவறா? இது சரியா?. இந்த கேள்விக்கு ஆளுநர் தெளிவான பதில் தரவில்லை.

இதுபற்றி தமிழ்நாடு அரசு பொறுமை காப்பதை நிறுத்தி, ஆளுநர் கோளாறு செய்யும் பட்சத்தில் உச்சநீதிமன்றத்தில் மற்ற எதிர்க்கட்சி மாநிலங்களைப்போல, வழக்கினையும் தாக்கல் செய்து, இங்கே நடப்பதை உலகறியச் செய்து, தக்க தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டாக வேண்டிய நேரம் நெருங்கி விட்டது என்று கூறி திராவிடர் கழக பொதுச்செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி பூனைக்கு மணியை கட்டியிருக்கிறார்.

ஆம், ஆளுநர் திருப்பி அனுப்பிய ஆன்லைன் தடைச்சட்ட மசோதாவை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி அவருக்கே தமிழ்நாடு அரசு அனுப்பி வைக்க இருக்கிறது. அவருக்கு அனுமதி தருவதைத் தவிர வேறு வழியில்லை. இன்னும் பல மசோதாக்கள் மாதக்கணக்கில் ஆளுநர் மாளிகையில் கிடப்பில் கிடக்கின்றன.

எனவே, மற்ற மாநிலங்களைப் போல தமிழ்நாடு அரசும் உச்சநீதிமன்றம் சென்று உரிமையை மீட்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டரீதியாக களம் காண வேண்டும். அதற்கு ஒட்டுமொத்த தமிழகமும் ஆதரவாக நிற்கும் என்பதில் ஐயமில்லை.

முதல்வரே, இன்னும் ஏன் தாமதம்?

படிக்க வேண்டும்

spot_img