உயர் நீதிமன்ற நீதிபதிகள் பணியிடங்களுக்கு 70 பெயர்களை கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. ஆனால் ஒன்றிய பாஜக அரசு இவர்களை நியமிப்பதில் அமைதியாக இருக்கிறது. இதனால் விசாரித்து முடிக்க முடியாமல் உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் காத்துக்கிடக்கின்றன.
இதற்கிடையில், நீதிபதிகள் நியமனம் தொடர்பாகப் பெங்களூரு வழக்கறிஞர்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கை நீதிபதிகள் சுதன்ஷு துலியா மற்றும் சஞ்சய் கிஷன் கவுல் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது நீதிபதிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் பணியிடங்களுக்கு 70 பெயர்களை கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. ஆனால் இவர்களை நியமிப்பதில் ஒன்றிய அரசு அமைதியாக இருக்கிறது.
இந்த நியமனங்களில் ஒன்றிய அரசின் கருத்து என்ன என்று தெரிந்தாலாவது நாங்கள் அடுத்த நடவடிக்கை என்ன என்றாவது எடுக்க முடியும். நீதிபதிகள் பணியிட மாற்றம் தொடர்பாக 26 பரிந்துரைகள் வந்துள்ளது. அதேபோல் 9 பேர் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதை ஒன்றிய அரசு ஏற்கவும் இல்லை, திருப்பி அனுப்பவும் இல்லை. அமைதியாக இருக்கிறது. இதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்த வழக்கு குறித்து 10 நாட்களுக்கு ஒருமுறை நீதிபதிகளின் பரிந்துரைகள் குறித்து ஒன்றிய அரசுக்குக் கேள்வி எழுப்புவோம்
என கூறி வழக்கை அக்டோபர் 9ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மௌனம் காக்கிறது. உச்சநீதிமன்ற விவகாரத்திலுமா மௌனம்? இந்நிலையில் உச்ச நீதிமன்ற அமைப்பை ஒன்றிய அரசு சிதைக்கிறது என ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்திருப்பது கவனிக்கத்தக்கது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூகவலைத்தள பதிவில், “உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமனம் உள்ளிட்ட 70 பரிந்துரைகள் அரசிடம் பல மாதங்களாக நிலுவையில் இருப்பது ஏன்?
கொலிஜீயத்தின் பரிந்துரைகளின் படி நீதிபதிகளை நியமிக்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது. நீதித்துறையின் சுதந்திரத்தையும் ஒருமைப்பாட்டையும் அரசாங்கம் அழித்து வருகிறது” என தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசின் இதுமாதிரியான போக்குகள் உச்ச நீதிமன்ற அமைப்பை சிதைத்து விடும் அபாயம் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. இந்தியா, சட்டத்தை மதிக்கும் மக்களைக் கொண்ட ஜனநாயக நாடு.
சட்டத்தை ஒரே குடைக்குள் வைத்து நீதியை நிலை நாட்டும் உயரிய அதிகாரம் கொண்டது உச்சநீதிமன்றம்.
அத்தகைய உச்சநீதிமன்ற பரிந்துரைகளை கிடப்பில் போடுவதும் அதனுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பதும் ஒருபோதும் சரியாகாது. மக்களுக்கு நீதி கிடைப்பதற்குத் தடையாக இருப்பதால் ஒன்றிய அரசுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது-? புரியவில்லை.
எனவே, உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம பரிந்துரைகளை ஏற்று உடனடியாக நீதிபதிகள் நியனங்களுக்கு அனுமதி அளித்து ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜனநாயக மாண்புகள் காக்கப்படும் என நம்புவோம்!