உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் கொலிஜியம் முறைப்படி நீதிபதிகள் நியமனம் நடைபெறுகிறது. கொலிஜியத்தில் இடம்பெற்றுள்ள நீதிபதிகள் அளிக்கும் பரிந்துரையின் பேரில், ஒன்றிய அரசு புதிய நீதிபதிகளை நியமிக்கிறது.
அந்தவகையில் நாட்டில் உள்ள பல்வேறு நீதுமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்க பரிந்துரைத்து, கொலிஜியம் கேட்டுக் கொண்டது. ஆனால் ஒன்றிய அரசு அதற்கு எந்த முடிவையும் சொல்லவில்லை. இதனால் பல நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமிக்கப்படாமல் உள்ளது.
இதையடுத்து நீதி அமைப்பிற்கும், ஒன்றிய அரசிற்கும் இடையேயான மோதல் போக்கு வெளிச்சத்திற்கு வந்தது. கடந்த நவம்பரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, கொலிஜியம் முறையை கடுமையாக விமர்சித்தார்.
கொலிஜியம் அமைப்பில் உள்ள நீதிபதிகள், தங்களுக்கு தெரிந்த வழக்கறிஞர்களை நீதிபதிகளாக பரிந்துரைப்பதாகவும், இதேபோல் தங்களுக்குத் தெரிந்த நீதிபதிகளுக்கு பதவி உயர்வு அளிக்க பரிந்துரைப்பதாகவும் கூறி, இது அடிப்படையிலேயே குறைபாடு உள்ள நடைமுறை என விமர்சித்தார்.
அதைத் தொடர்ந்து துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கரும், நீதி அமைப்பு பாராளுமன்றத்தை கட்டுப்படுத்துவதாக அதிருப்தி தெரிவித்தார். மேலும், நேற்றைய தினம் ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, ‘‘இந்திய ஜனநாயகத்தின் உண்மையான அழகு அதன் வெற்றி.
அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளையும், மக்களின் ஆணையையும் புறக்கணிப்பவர்கள் மட்டுமே இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு மேலானவர்கள் என்று நினைக்கிறார்கள்’’ என உச்சநீதிமன்றத்தை சூசகமாக தாக்கி பேசினார்.
இப்படியாக உச்சநீதிமன்றத்திற்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து முற்றி வருகிறது என்பதையே இது காட்டுகிறது. இது ஜனநாயகத்திற்கு பேராபத்தான விஷயம். இந்தப் போக்கு மாற வேண்டும் என ஜனநாயகவாதிகளும் ஒவ்வொரு குடிமகனும் விரும்புகின்றனர்.
இத்தகைய சூழலில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் கருத்துக்கு பிரதமர் மோடி திடீரென பாராட்டு தெரிவித்துள்ளது பேசு பொருளாகியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புகளை பிராந்திய மொழிகளில் வழங்குவது குறித்து இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் சமீபத்தில் கூறிய கருத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மும்பையில் மகாராஷ்டிரா மற்றும் கோவா பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி நேற்று கருத்து தெரிவித்திருந்தார். இதை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், “சமீபத்திய விழாவில், தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், பிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் கிடைக்கப் பாடுபட வேண்டியதன் அவசியத்தைப் பற்றிப் பேசினார்.
அதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் அவர் பரிந்துரைத்தார். இது பாராட்டுக்குரிய சிந்தனை, இது பலருக்கு உதவும். குறிப்பாக இளைஞர்களுக்கு வெகுவாக பயன்படும்.
இந்தியாவில் பல மொழிகள் உள்ளன, அவை நமது கலாச்சார அதிர்வை அதிகரிக்கின்றன. பொறியியல் மற்றும் மருத்துவம் போன்ற பாடங்களை ஒருவரின் தாய்மொழியில் படிக்கும் விருப்பத்தை வழங்குவது உட்பட, இந்திய மொழிகளை ஊக்குவிக்க ஒன்றிய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்திற்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே போர் முற்றியுள்ள நிலையில் பிரதமர் மோடியின் இந்த பாராட்டு வரவேற்கத்தக்கதே. இருதரப்பிற்கும் இடையே உறவு சீரடைந்தால் தான் நாட்டில் ஜனநாயகம் தழைக்கும் என்பதை யாராக இருந்தாலும் மறந்து விடக்கூடாது.
ஜனநாயகத்தின் ஆணி வேரை அசைத்துப் பார்க்கும் முயற்சியில் யாரும் இறங்க வேண்டாம். அது நாட்டுக்கு நல்லதல்ல!