நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கோவையை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் நூர் முகமது என்பவர் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு “ஜனநாயகம் இறந்து விட்டது” என குறிப்பிடும் வகையில் சவப்பெட்டியுடன் மனுத்தாக்கல் செய்ய வருகை புரிந்திருந்தார்.
அவரை 200 மீட்டருக்கு முன்பு தடுத்து நிறுத்திய போலீசார் சவப்பெட்டியை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். அவரை மட்டும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வருமாறு அறிவுறுத்தினர். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அவர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நூர் முகமது, 1996-ம் ஆண்டு முதல் வேட்பு மனு தாக்கல் செய்து வருவதாகவும் 97-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றதாகவும் தெரிவித்தார்.
மேலும் மாமன்ற உறுப்பினர் முதல் ஜனாதிபதி தேர்தல் வரை வேட்பு மனு தாக்கல் செய்ததாகவும் தெரிவித்த அவர், ஜனநாயக முறைப்படி யாரும் இல்லை. ஜனநாயகத்தில் மக்கள் ஓட்டு போடுவதற்கு பணம் பெற்று தான் ஓட்டு போடுகிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டினார்.
மேலும் ஏற்கனவே 41 முறை வேட்பு மனு தாக்கல் செய்து விட்டதாகவும் தற்பொழுது 42-வது முறையாக பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்துள்ளதாக தெரிவித்தார்.
ஜனநாயகம் இறந்துவிட்டது என்பதை தெரியப்படுத்தும் வகையில் சவப்பெட்டி கொண்டு வந்த போது காவல்துறையினர் அதனை பறித்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் கூறினார்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.