கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் கடந்த மார்ச் 1-ம் தேதி பிற்பகல் நேரத்தில் திடீரென குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. 10 பேர் படுகாயம் அடைந்ந இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பெங்களூரு போலீசார் ஆரம்பகட்ட விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகின.
இதையடுத்து அந்த நபர் குறித்து தகவல் தெரிவித்தால், தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் அம்மாநில அரசு அறிவித்திருந்தது. இந்த வழக்கை தற்போது என்ஐஏ விசாரித்து வருகிறது. ஒருவரை சந்தேகத்தின்பேரில் கைது செய்திருந்தாலும் குற்றவாளி இன்னும் சிக்கவில்லை.
என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தமிழர்கள் தான் வெடிகுண்டு வைத்திருப்பார்கள் என்று ஒன்றிய இணை அமைச்சர் ஷோபா, எந்த ஆதாரமும் இன்றி தான்தோன்றித் தனமாக பேசி இருக்கிறார். கன்னடர்களும் தமிழர்களும் ஒற்றுமையாக வாழ்வதற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அவரது வெறுப்பு பேச்சு அமைந்துள்ளது.
ஒன்றிய அமைச்சரின் பேச்சுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாகக் கண்டித்துள்ளார். ` நாட்டின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேச அவர் (பாஜக அமைச்சர் ஷோபா) ஒன்று, என்.ஐ.ஏ அதிகாரியாக இருக்கவேண்டும், அல்லது இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்வுடன் நெருங்கிய தொடர்புடையவராக இருக்க வேண்டும். தமிழர்களோடு கன்னடர்களும் பா.ஜ.க.வின் இந்த பிளவுவாதப் பேச்சை நிராகரிப்பார்கள்.
ஷோபா மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் ஆணையம் உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்` என கண்டித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர். வெறுப்புணர்வை விதைப்பதன் மூலம் ஒன்றிய பாஜக இணை அமைச்சர் ஷோபா தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இடையே சண்டை மூட்ட முயல்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
பிரதமர் மோடி, தமிழ்நாட்டிற்கு வந்து தமிழர்களை போற்றிப் புகழ்ந்த அதே சமயத்தில் தமிழர்களை புழுதிவாரி தூற்றியிருக்கிறார், அவரது அமைச்சரவை சகா ஷோபா. அவரை கண்டிப்பாரா பிரதமர் மோடி? குற்றவாளியை கைது செய்ய ஆதாரத்தைத் தேடி அலையும் என்ஐஏ, அந்த அமைச்சரை தன் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவருமா?
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் இப்போது நடவடிக்கை எடுக்க வேண்டிய முக்கிய பொறுப்பு இந்திய தேர்தல் ஆணையத்தின் கையில் உள்ளது. என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறதோ, பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்த நிலையில் சர்ச்சைக்கு ஆளான ஒன்றிய அமைச்சர் ஷோபா, கண்டனங்கள் குவிந்தவண்ணம் இருந்ததால் வேறுவழியின்றி மன்னிப்பு கேட்டுள்ளார்.
நமது தேசத்தின் நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வெறுப்புப் பேச்சை இனி யாரும் தொடரக்கூடாது. அப்படிப பேச அனுமதிக்கவும் கூடாது என்பதே நாட்டு மக்களின் விருப்பம்.
ஒற்றுமையை சீர்குலைக்கும் வெறுப்பு பேச்சு வேண்டாம், வேண்டவே வேண்டாம்!