அரசுத் துறையிலோ தனியார் நிறுவனங்களிலோ பணிபுரியும் பெண்களுக்கு மேலதிகாரத்தில் இருப்பவர்களால் பாலியல் தொல்லை கொடுக்கப்படுவது நடந்து கொண்டு தான் இருக்கிறது. அவற்றின் மீது நடவடிக்கைகளும் பாயத் தான் செய்கின்றன. ஆனாலும் தொடர்கிறது.
பெண் ஊழியரைத் தொட்டு பேசுவது, பாலியல் உறவுக்கு அழைப்பது, அதிகாரத்தை வைத்து மிரட்டுவது, பாலியல் ரீதியான வார்த்தைகளைப் பேசுவது, ஆபாச படங்களை காட்டுவது உள்ளிட்டவை பாலியல் தொல்லைகளாக வரையறுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தடுக்கவே, அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் விசாகா கமிட்டிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. 10 பேருக்கு மேல் பணியாற்றும் அனைத்து நிறுவனங்களிலும் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும் என்பது கட்டாயம்.
பல்வேறு நிறுவனங்களில் விசாகா கமிட்டிகள் அமைக்கப்பட்டு இருந்தாலும், இது நடைமுறையில் எந்த அளவிற்கு பலன் தருகிறது என்பது கேள்விக் குறி தான். பல நிறுவனங்களில் ஒப்புக்கு அல்லது அரசை ஏமாற்றவே விசாகா கமிட்டிகள் அமைத்துள்ளதாகவும் புகார்கள் எழுவதுண்டு.
இந்த கமிட்டிகள் எவ்வித சமரசத்திற்கும் இடந்தராமல் செயல்பட்டால் தான் பணியிடங்களில் பாலியல் தொல்லையில் இருந்து பெண்களை காப்பாற்ற முடியும். பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் தொல்லைகளுக்கு கருணை காட்ட முடியாது என ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்து இருந்தது நினைவிருக்கலாம்.
அந்த உத்தரவுக்கு வலு சேர்க்கும் வகையில் காவல்துறை ஒரு நடவடிக்கையை நேற்றைய தினம் எடுத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் காவல்நிலைய ஆய்வாளர் வீரகாந்தி, அதே காவல்நிலைய பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்ததற்காக டிஸ்மிஸ் (நிரந்தர பணி நீக்கம்) செய்யப்பட்டு இருக்கிறார்.
ஏடிஎஸ்பி லாவண்யா தலைமையிலான விசாகா கமிட்டி நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த கடும் நடவடிக்கையை காவல்துறை எடுத்துள்ளது. ஆய்வாளர் வீரகாந்தியின் செல்போன் உரையாடல், குறுந்தகவல் போன்றவற்றின் மூலம் அவர் மீதான குற்றம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்தால் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்பதில் ஐயமில்லை. Êசஸ்பெண்டு செய்யாமல் ஆய்வாளரை டிஸ்மிஸ் செய்திருப்பது, கேவலமான பாலியல் சீண்டலில் ஈடுபடத் துணியும் அதிகார வர்க்கத்தினருக்கு ஓர் பாடமாக அமையட்டும்.
தொடரட்டும் டிஸ்மிஸ் நடவடிக்கை!