ராமேஸ்வரம் பகுதியிலிருந்து வங்கக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கைக் கடற்படையினர் கச்சத்தீவு பகுதியில் கைது செய்திருக்கின்றனர். அவர்களின் இரு விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து இலங்கைக் கடற்படையினர் நிகழ்த்தியுள்ள இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும். வங்கக்கடலில் தமிழக மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்கக் கூடாது என்ற நயவஞ்சக எண்ணத்துடன் தான் இலங்கைக் கடற்படையினர் இத்தகைய கைது நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
ஒருபுறம் தமிழக மீனவர்கள் மீது கடல் கொள்ளையர்களைக் கொண்டு தாக்குதல் நடத்துதல், இன்னொருபுறம் மீனவர்களை கைது செய்து, அவர்களின் படகுகளை பறிமுதல் செய்தல் என இருமுனைத் தாக்குதல் நடந்து வருகிறது.
நேற்று கூட தமிழக மீனவர்கள் கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டுள்ளனர். இதனால், தமிழக மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர்.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கை அரசுக்கு இந்தியா தான் உதவிகளை வழங்கி வருகிறது.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்குடன் நாகை – காங்கேசன் துறைமுகம் இடையே கப்பல் போக்குவரத்தையும் இந்தியா தொடங்கியுள்ளது.
ஆனால், இந்தியாவின் நல்லெண்ண நடவடிக்கைகளை புரிந்து கொள்ளாத இலங்கை கடற்படை மீனவர்களை தாக்கியும், கைது செய்தும் இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடுத்து வருகிறது.
ஒவ்வொரு முறை தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும்போதெல்லாம் அவர்களை விடுவிக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம் எழுதுவதும் மீனவர்கள் விடுதலை ஆக மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்வதும் வழக்கமான நடைமுறையாக மாறி விட்டது. இந்த நடைமுறை நீடித்தால் ஒருபோதும் நிரந்தர தீர்வு கிடைக்காது.
எனவே, தமிழக மீனவர்கள், அவர்களின் பாரம்பரியமான மீன்பிடி பகுதிகளில் தடையின்றி மீன் பிடிப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலையும், கைது நடவடிக்கைகளையும் கைவிடும்படி இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும்.
இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்டுவதில் மத்திய அரசு இனியும் மெத்தனம் காட்டாமல் உருப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்!



