அயோத்தியில் இன்று இராமர் கோயிலை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். அரசியல் ஆதாயத்திற்கு இராமர் கோயில் திறக்கப்படுவதாக கூறி பல்வேறு அரசியல் கட்சிகள் இதனை புறக்கணித்துள்ளன.
பாஜகவின் மதவாத அரசியல் மூலம் வட மாநிலங்களில் குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களில், பெரும் தாக்கத்தை உருவாக்கி உள்ளது உண்மை தான். அதேபோல காசி – தமிழ் சங்கம், மோடியுடன் பேரணி, மதவாத நிகழ்வுகள் போன்ற ஏமாற்று அரசியலை வைத்து தென் மாநிலங்களையும் கைப்பற்றி விடலாம் என்ற கனவோடு அதற்கான முயற்சிகளை பாஜக தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
எனினும், தென் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவில் அடிநிலை கட்சியாகவே பாஜக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக தென் மாநிலங்களை கடும் நிதி நெருக்கடியில் தள்ளி ஒன்றிய பாஜக அரசு வேடிக்கை பார்க்கிறது.
பேரிடர்களுக்காக கூட தேவையான நிதியை ஒதுக்காமல் மாநில அரசுகளின் தோளில் பெரும் சுமையை தூக்கி வைக்கிறது. அண்மையில் தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களின் பேரிடருக்கான நிதியை மிகமிக குறைவாக வழங்கி உள்ளது.
மேலும், அண்ணாமலை போன்ற மாநிலத் தலைவர்களும், பெரும் அரசியல் புரிதலற்ற நிலையில், குறிப்பாக தமிழக மக்களின் தேவைகள், அடிப்படைகளுக்கு முற்றும் புறம்பான இந்துத்துவ அரசியலை, தமிழ்நாட்டில் நடத்திவருகின்றனர். இதன் தாக்கம், மக்களிடையே குழப்பத்தை ஏற்பத்தியுள்ளது.
இவ்வாறு குழப்பத்தை உண்டாக்கி, அதனில் குளிர்காய நினைக்கும் பாஜகவிற்கு, அதிபெரும் தோல்வியை, மாற்றமில்லாமல் இம்முறையும் திருப்பி அளிக்கப்படும் என்பதில் எவ்வித குழப்பமும் இல்லை என்ற உறுதியை தென் இந்திய மக்கள், அண்மையில் வெளியான தேர்தல் முடிவுகளின் வழி தெரிவித்துள்ளனர்.
எனினும், பாஜகவின் குளறுபடி நடவடிக்கைகளாலும், மதவாத அரசியலைக் கொண்டும் ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வெற்றி கண்டுள்ளனர். அதேபோல, தென் மாநிலங்களிலும் தனது தரம் குறைந்த அரசியலைப் புகுத்த நினைத்து தேர்தலின் நெருக்கத்தில் மட்டுமே பிரதமர் உள்ளிட்ட பாஜக தேசிய தலைவர்கள் இங்கே படையெடுத்து வருகின்றனர்.
வேண்டுமென்றே தென் மாநிலங்களுக்கு தொடர்ந்து நிதி நெருக்கடிகளைக் கொடுத்து வரும் அரசியல் சூழ்ச்சிகளைச் சரிவரக் கண்டறியும் தெளிவு, தென் மாநில மக்களுக்கு குறிப்பாக தமிழ்நாடு மக்களுக்கு உண்டு என்ற உணர்வெழுச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் சேலத்தில் திமுக மாநில இளைஞர் அணி மாநாடு எழுச்சியுடன் நடந்து முடிந்துள்ளது.
இதில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தெற்கில் விடியல் பிறந்திருப்பதைப்போல விரைவில், விரைவில் இந்திய நாடு முழுவதும் விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது
என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாஜக அரசுக்கு முடிவு கட்டுவதற்கான படை சேலத்தில் இருந்து புறப்பட்டுவிட்டது
என்றும் முழங்கி இருக்கிறார்கள்.
மதவாத சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைத்து பாஜகவிடம் இருந்து நாட்டையே குறிப்பாக தென் மாநிலங்களைக் காப்பாற்றும் கடமை தமிழகத்திற்கு உருவாகியுள்ளது என்பதைத் தான் சேலம் மாநாடு உணர்த்துகிறது.
மதவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து ஒன்றியத்திலும் மாநிலங்களிலும் சமூக நீதி ஆட்சியே மலரவேண்டும். அது தான் மதசார்பற்ற ஜனநாயக நாடான இந்தியாவிற்கு நல்லது.
தெற்கின் விடியல் இந்தியா முழுவதும் மலரட்டும்!