மனிதகுலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள பருவநிலை மாற்றத்தின் விளைவுகளையும், அதனால் உலகம் சந்திக்க கூடிய பெரும் சவால்கள் குறித்து இளம் தலைமுறையினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் இளைஞர்களும் கால நிலையும் எனும் மாநாடு நடைபெற்றது.
கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ் ணம்மாள் மகளிர் கல்லூரி, சிறுதுளி மற்றும் பூவுலகின் நண்பர்கள் இணைந்து இளைஞர்களும் கால நிலையும் என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. முன்னதாக நடை பெற்ற மாநாடு துவக்க விழாவில் கிருஷ்ணம்மாள் கல்லூரியின் சேர் பெர்சன் நந்தினி அனைவரையும் வரவேற்று பேசினார்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக, இம்மாநாட்டை, சுற்றுச்சூழல் ஆர்வலர்களான மகாராஷ்டிரத்தை சேர்ந்த சான்சுவரி நேச்சர் பவுண்டேஷனின் நிறுவனர் ரந்தீர் பிட்டு சேகல், மகசேசே விருது பெற்று, இந்தியாவின் தண்ணீர் மனிதர் என அழைக்கப்படும் தருண் பாரத் சங்கத்தின் நிறுவனருமான முனைவர் ராஜேந்திர சிங் ஆகியோர் உரையாற்றி துவக்கி வைத்தனர்.
இதில் கௌரவ அழைப்பாளர்களாக, சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன், சாசி வாட்டர் நிறுவனர் பேராசிரியர் ஜனகராஜன், மூத்த பத்திரிகையாளர் கவிதா முரளிதரன், கோயம்புத்தூர் குடியிருப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் இணை செயலாளர் சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டு சுற்று சூழல் பாதுகாப்பின் அவசியத்தை இளைஞர்கள் தெரிந்து கொள்வதன் அவசியத்தை கூறினர்.
மாநாட்டில் நிறைவு விழாவில், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டு பேசுகையில், நாளைய சந்ததிகள் ஆரோக்கியமாக வாழ சுற்றுச்சூழலை காப்பதிலும் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்துவதிலும், இதற்கான புதுமையான தீர்வுகளை கொடுப்பதிலும் இளம் தலைமுறையின் பங்கு மிக முக்கியம் என சுட்டி காட்டினார்.
கால நிலை மாற்றத்தை எதிர்த்து, போராட வேண்டியது அவசியம் என கூறிய அவர், பருவநிலை மாற்றங்களால் இந்தியாவில் அரிசி, கோதுமை போன்ற உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதாக மத்திய விவசாய துறை எச்சரித்துள்ளதாக தெரிவித்தார்.
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதி, உலக புகழ் வாய்ந்த சிறுவாணி நீர், பசுமையான இடங்கள் மற்றும் சுற்றுச்சூழல் உணர்வுள்ள உள்கட்டமைப்புகளுடன் கூடிய எதிர்காலத்தை அமைக்க பாதுகாக்க சூளுரைப்போம் என தனது உரையை நிறைவு செய்தார்.
விழா நிறைவில், கல்லூரி முதல்வர் முனைவர் மீனா நன்றி கூறினார்.