ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அதில் பங்கேற்காமல் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனோடு திடீரென இலங்கைக்கு 4 நாள் பயணமாக புறப்பட்டுச் சென்று விட்டார்.
இதுதொடர்பாக பேட்டியளித்த அண்ணாமலை, இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அந்நாட்டுக்கு செல்கிறார். இலங்கை அரசியல் கட்சிகளின் அழைப்பின் பேரில் நான் இலங்கைக்கு செல்கிறேன்.
இத்தகைய பயணங்களால் நமது இந்திய மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்
என தெரிவித்தார். கடந்த ஆண்டும் அண்ணாமலை இலங்கை பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது இலங்கையில் பல்வேறு தரப்பு அரசியல் தலைவர்களை அவர் சந்தித்து பேசினார்.
அண்ணாமலையின் அந்த பயண கால கட்டத்தில், இலங்கையிடம் இருந்து இந்தியா கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் உருப்படியான தகவல் எதையும் அவர் வெளியிடவில்லை.
தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்னைக்குத் தீர்வு வேண்டுமென்றால் கச்சத் தீவை மீட்டெடுத்தே ஆக வேண்டும். இது (கச்சத்தீவு மீட்பு) நடந்தால் தான் அது (தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு) கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்த சங்கதி.
அதேபோலத் தான் இலங்கை தமிழர்களுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டுமானால் அந்நாட்டு அரசியல் சாசனத்தின் 13 வது திருத்தத்தை அமல்படுத்த வேண்டும்.
மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், முரளிதரன் ஆகியோர் ஏற்கனவே இலங்கை சென்று திரும்பியுள்ளனர்.
அவர்கள் இலங்கை அரசோடு பல்வேறு விஷயங்களை விவாதித்தபோதிலும் தமிழ்நாட்டு மீனவர்கள் குறித்து அவர்கள் பேசியதாக தெரியவில்லை. அது தொடர்பாக அவர்கள் எந்த தகவலையும் தமிழர்களோடு பகிர்ந்து கொள்ளவும் இல்லை.
தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்னையை விவாதித்திருக்க வேண்டிய கடமையை செய்யாமல் இலங்கைக்கு சென்று திரும்பி விட்டார், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்.
அவர் இலங்கை சென்றபோது ஏதேனும் பேசி தமிழ்நாட்டு மீனவர்களுக்கு நல்ல செய்தி கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சர்வதேச விஷயங்களை பேசிவிட்டு, நம் தமிழ்நாட்டு பிரச்னையை பேசாமல் விட்டு விட்டார்.
இந்த நிலையில், தற்போது எல்.முருகனும் அண்ணாமலையும் இலங்கைக்கு படையெடுத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு குறித்து பேசுவோம் என்று வேறு கூறிவிட்டு விமானம் ஏறி இருக்கிறார்கள்.
இவர்கள் என்ன சேதி கொண்டு வரப்போகிறார்களோ? என்ன சாதிக்கப்போகிறார்களோ?
வழக்கம் போல பொறுத்திருந்து பார்ப்போம்!