ஆட்டோமோட்டிவ் டயர் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ATMA வருடாந்திர மாநாட்டில், எம்ஆர்எஃப் லிமிடெட் – ன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரும் மற்றும் ATMA – ன் முன்னாள் தலைவருமான கே.எம். மேமென் வாழ்நாள் சாதனை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மாருதி சுசுகி இந்தியா லிமிடெட்ன் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் ஹிசாஷி டேகுச்சி, இவ்விருதினை வழங்கினார்.
கே.எம். மேமெனின் தனித்துவமான மற்றும் நேர்த்தியான தலைமைத்துவ பண்புகளுக்காகவும், இந்திய டயர் தொழில்துறைக்கு செய்திருக்கும் விலை மதிப்பற்ற பங்களிப்பிற்காகவும் மற்றும் 20 ஆண்டுகளுக்கும் அதிகமாக முன்னணியிலிருந்து இத்தொழில் துறையை வழிநடத்துவதற்காகவும் வாழ் நாள் சாதனையாளர் விருது அவருக்கு வழங்கப் பட்டுள்ளது.
கே.எம். மேமென் கூறியதாவது: ATMA வாழ்நாள் சாதனை விருதைப் பெறுவது எனக்குத் தரப்பட்டிருக்கும் மிகச்சிறந்த கௌரவம். எம்ஆர்எஃப் லிமிடெட் -ன் நிறுவனர் கே.எம். மேமென் மாப்பிள்ளை, இந்நிறுவனத்திற்காக தொலைநோக்குப் பார்வையை யும், திட்டத்தையும் கொண்டிருந்தார்.
அந்த தொலைநோக்குப் பார்வையோடு இலக்கை அடைவதற்காக செயலாற்று வதே எனது தொடர்ச்சியான முயற்சியாக இருந்து வருகிறது. இத்தொழில்துறையின் ஓர் அங்கமாக இருக்க வாய்ப்பு கிடைத்தது குறித்து நன்றியுணர்வே நிரம்பியிருக்கிறது.
டயர் தொழில்துறைக்கு இந்த உலகத்திற்கே ஒரு முதன்மை மையமாக இந்தியாவை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக நாங்கள் அனைவரும் செய்திருக்கும் மாபெரும் முயற்சிகளின் ஓர் அங்கீகாரமே இவ்விருது என்று நான் நம்புகிறேன்.
மிகச்சிறந்த தரத்திலான டயர்களை உற்பத்தி செய்யும் திறனையும் மற்றும் உலகச் சந்தையில் போட்டியிடும் திறனையும் இப்போது நாம் கொண்டிருக்கிறோம் என்றார்.
ரூ.19,000 கோடிக்கும் (2.3 பில்லியன் யுஎஸ் டாலருக்கும் அதிகமாக) மிகைப்பட்ட விற்றுமுதல் என்ற மைல்கல்லை எட்டியிருக்கும் எம்ஆர்எஃப் ஒவ்வொரு சாதனையின் பின்புலத்திலும் கே.எம். மேமென் இருந்திருக்கிறார்.
உலகின் முதன்மையான டயர் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக எம்ஆர்எஃப் தரவரிசையில் இடம்பெற்றிருப்பதற்கு இவரது பங்களிப்பு மிக முக்கியமானது.