இந்தியாவில் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்துக் கொள்வதற்கு அங்கீகாரம் கொடுப்பது தொடர்பான முடிவெடுக்கும் வரலாற்று சிறப்புமிக்க விசாரணையில் சுவாரசியமான வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஏப்ரல் 18 முதல் விசாரித்து வருகிறது. இந்த மனுக்களின் மீதான விசாரணை உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த விசாரணையில் இதுவரை ஆறு அமர்வுகள் முடிந்துவிட்டது. பல்வேறு தனிநபர்கள் மற்றும் குழுக்களிடமிருந்து பலவிதமான கருத்துகள் மற்றும் அறிக்கைகள் கிடைத்துள்ளன. அவற்றில் சில அசாதாரணமானவை, வேறுசில அற்புதமானவை.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைவருக்கும் தங்கள் வாழ்க்கையை கண்ணியமாக வாழ உரிமை வழங்கியுள்ளது என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், தற்போதைய பாலின திருமணம், விவாதங்கள் தொடர்பாக பேசும்போது, பிறப்புறுப்புகளால் ஆண் அல்லது பெண் என்பது தீர்மானிக்கப்படுவதில்லை என்று கூறினார்.
பெண்களை மையமாகக் கொண்ட சட்டங்களுக்கு என்ன நடக்கும் என்றும், பிறப்புறுப்பு ஒருவரின் பாலினத்தை முடிவு செய்வதில்லை என்றால், ஒரு நபரை ஒரு குறிப்பிட்ட சட்டப் பிரிவின் கீழ் விசாரிக்க முடியுமா என்பதை நீதிமன்றங்கள் எவ்வாறு தீர்மானிக்கும் என்று ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கேள்வி எழுப்பினார்.
மூத்த வழக்கறிஞர் மேனகா குருசுவாமி, ஓரினச்சேர்க்கை திருமணங்கள் வெறும் கண்ணியம் மட்டுமல்ல, ஆயுள் காப்பீட்டைப் பெறுவதற்கான அடிப்படை உரிமை உட்பட பல உரிமைகளையும் தம்பதியருக்கு வழங்குகின்றன என்று கூறினார்.
சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஒரே பாலின உறவுகள் மற்றும் உடலுறவு ஆகியவற்றை குறிப்பிட்டு, அவற்றை “தடைசெய்யப்பட்ட உறவுகள்” என்று தெரிவித்தார்.
திருமணத்திற்கு வெவ்வேறு பாலினமாக இருப்பதன் அவசியத்தை கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ஒரே பாலின உறவுகள் “உடல் ரீதியாக மட்டும் அல்ல” என்று வலியுறுத்தினார்.
இந்த வழக்கில் மத்திய அரசு பதில் மனுத் தாக்கல் செய்தது. அதில், ஒரே பாலினத்தவர் திருமணம் என்பதும் அதற்கு அங்கீகாரம் கோருவதும் என்பதும் சமூகத்தில் மேல்தட்டு வர்க்கமாக இருப்பவர்களின் பார்வையும் கோரிக்கையும்.
இது சமூகத்தின் இதர பிரிவுகளிடையே பாதிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தக் கூடும். இத்தகைய திருமணங்களுக்கு அங்கீகாரம் தருவது சமூக சமநிலையை பாதிக்கும் என தெரிவித்தது.
ஒரு பாலின திருமண விவகாரத்தை நீதிமன்றம் விசாரிக்கவே கூடாது என மத்திய அரசு தரப்பில் ஆணித்தரமாக வாதிடப்பட்டது. இரு நாட்களுக்கு முன்பு நடந்த விசாரணையின்போதும், அதே வாதத்தை அழுத்தமாக முன்வைத்தது.
சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஒரே பாலின திருமண அங்கீகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்து முடிவெடுக்க நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்று மிக அழுத்தமாக தன் வாதத்தை தற்போது முன்வைத்தார்.
இப்படியாக வாதம் சுவாரஸ்யமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பு சொல்லப்போகிறது? என்பது பெரும் எதிர்பார்ப்பாக மாறி இருக்கிறது.
நாடாளுமன்றம் முடிவு செய்யட்டும் என கைகாட்டப் போகிறதா? அல்லது பரபரப்பான தீர்ப்பை வழங்கப்போகிறதா?.
பொறுத்திருந்து பார்ப்போம்!



