2019ல் தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி பேசிய கருத்து தொடர்பாக, அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தீர்ப்பின்படி இரண்டு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, எம்பி பதவியிலிருந்து ராகுல் காந்தி நீக்கப்பட்டதாக மக்களவை செயலகம் மார்ச் 24-ம் தேதி அறிவித்தது.
மேலும் 8 ஆண்டுகள் அவர் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்த நடவடிக்கையை எதிர்த்து கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் ராகுல் காந்திக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.
ராகுல் காந்தியின் எம்.பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸ் தரப்பில் நாடு முழுக்க போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தியாவில் ஒரு நீதிமன்றம் அவதூறு வழக்கு ஒன்றுக்காக இரண்டு ஆண்டுகள் தண்டனை தருகிறது என்றால் இதனை அனைத்து அரசியல்வாதிகளுக்குமே ஒரு ஆபத்தாகத் தான் பார்க்க வேண்டும். வரலாற்றிலேயே வருத்தம் தரக்கூடிய தீர்ப்பாகத்தான் இதனை அரசியல் விமர்சகர்கள் பார்க்கிறார்கள்.
பொதுவாக அவதூறு வழக்குகளில் அபராதத் தொகை வசூலிக்கப்படும், தேர்தல் சமயங்களில் பேசுவதற்கு அனுமதி மறுப்பு போன்ற நடவடிக்கைகளையே நாம் பார்த்திருக்கிறோம். அதிலும் 2 ஆண்டுகள் தண்டனை பெற்றால் தான் எம்.பி தகுதி நீக்கம் செய்ய முடியும் என்ற நிலையில் நீதிமன்றமும் ராகுல்காந்திக்கு சரியாக 2 ஆண்டுகள் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதனை ஜனநாயக படுகொலை என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பல அரசியல் தலைவர்கள் இன்றைய அரசியல் மேடைகளில் கீழ்த்தரமாகப் பேசிவருகிறார்கள் என்பது கண்கூடு. அவர்கள் மீது நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கியுள்ளது?
ராகுல்காந்தி எம்பி பதவியை இழந்தபோதிலும் இந்த தீர்ப்பு மிக உறுதியாக ராகுல் காந்தியின் செல்வாக்கை உயர்த்தும் என்பதில் சந்தேகம் இல்லை. மக்கள் மத்தியில் இத்தீர்ப்புக்கு எந்தவித ஏற்பும் இல்லை.
பாரத் ஜோடோ யாத்திரை காங்கிரஸ் நிர்வாகிகளைப் புத்துணர்வடையச் செய்தது, தற்போது வந்துள்ள இத்தீர்ப்பு மக்களை ராகுல் காந்தி பக்கம் திருப்பியுள்ளது.
சாமானிய மக்கள் இதனை அனுதாபத்துடன் அணுகுவதால் அதுவே காங்கிரசுக்கு விழும் வாக்குகளாக மாறுவதற்குக் கூட சாத்தியம் பிரகாசமாக இருக்கிறது.
பாதயாத்திரை நடத்தியதால் ராகுல் காந்தி மக்கள் செல்வாக்கு அதிகரித்ததாலும் அதானி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பியதாலும்தான் இதுபோன்ற ஜனநாயகமற்ற நடவடிக்கைகளை பாஜக மேற்கொள்கிறது என காங்கிரஸ் குற்றம் சுமத்துகிறது. பாஜகவோ, இதில் எங்களுக்கு எந்த பங்குமில்லை. இது நீதிமன்றத்தின் முடிவு எனப் பதிலளித்து இருக்கிறார்கள்.
ராகுல்காந்தி எந்த விதத்தில் எம்பி பதவியை இழந்திருந்தாலும் காங்கிரசின் முன்னாள் தலைவருக்கு இந்த நிலை ஏற்பட்டு இருக்கக் கூடாது என்பதே நாட்டு மக்களின் எண்ணமாக மாறி இருக்கிறது. இதுவே ராகுல்காந்திக்குக் கிடைத்த வெற்றியாகத்தான் பார்க்கப்படுகிறது.
பாதயாத்திரை மூலம் கிடைத்த பலனை விட பதவி நீக்கத்தின் மூலம் கிடைத்துக் கொண்டிருக்கிற பலன் அதிகம் என்றும் இது 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் வரக்கூடிய மத்திய, மாநில தேர்தல்களில் பாஜக மீது மக்கள் எவ்வளவு கோபமாக இருக்கிறார்கள் என்பது நிச்சயம் வெளிப்படும் என காங்கிரஸ் தரப்பு அடித்துச் சொல்கிறது.
ராகுல்காந்தியின் செல்வாக்கு உயர்ந்திருக்கிறது, உயர்ந்து கொண்டே இருக்கிறது என்பது உண்மையா? நெருங்கும் 2024 தேர்தல் முடிவுகளே அதனை மெய்ப்பிக்கும்!



