உலகளவில் பப்ஜி கேம் 60 கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த விளையாட்டை 5 கோடி பேர் தொடர்ந்து விளையாடி வருகின்றனர். இந்தியாவில்தான் அதிகபட்சமான பதிவிறக்கங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் பப்ஜி கேம் 17.5 கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பின்னர் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகக் கடந்த 2020ம் ஆண்டு பப்ஜி உள்ளிட்ட 117 சீன செயலிகளுக்கு ஒன்றிய அரசு தடை விதித்தது. இதனால் பப்ஜி விளையாடிவந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதையடுத்து 2021ம் ஆண்டு பப்ஜி விளையாட்டைப் போன்றே Battlegrounds Mobile India என்ற கேம் வெளிவந்தது. பின்னர் இதை பப்ஜி ரசிகர்கள் பதிவிறக்கம் செய்து விளையாடி வந்தனர். கடந்த ஆண்டு இந்த செயலியும் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது.
இந்நிலையில்Battlegrounds Mobile India என்ற விளையாட்டிற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. இது குறித்து ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வெளியிட்டுள்ள ட்விட்டரில், Battleground Mobile Indiaவிளையாட்டுக்கு மூன்று மாதங்களுக்குச் சோதனை அடிப்படையில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று மாதகாலத்தில் பயனர்கள் அடிமையாதல் போன்ற சிக்கல்கள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு பிறகு அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும்“ என தெரிவித்துள்ளார்.
இந்தியா – சீனா எல்லை பிரச்சனை இருந்தபோது சீன செயலிகளுக்கு ஒன்றிய அரசு தடைவிதித்தது. தற்போது அதே செயலிகளுக்கு ஒன்றிய அரசு அனுமதி கொடுத்துள்ளது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதற்கு என்ன அவசியம்? பப்ஜி இல்லாததால் என்ன குடியா மூழ்கி விட்டது? எனக்கேட்டு அரசியல் விமர்சகர்கள் ஒன்றிய பாஜக அரசை விமர்சித்து வருகின்றனர்.
இளைஞர்கள் பலரது உயிர்களை காவு கொண்ட பப்ஜி விளையாட்டை மீண்டும் அனுமதிப்பதில் ஏன் இவ்வளவு அக்கறை காட்ட வேண்டும்? அரசின் இந்த முடிவு பெற்றோரை அச்சப்பட வைத்துள்ளது.
வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு!



