ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் செயல்பட்டு வரும் நாராயண் சேவா சன்ஸ்தான் தமிழகத்தில் முதன் முறையாக, கோவையில் முகாம் நடத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை மூட்டு மற்றும் காலிபர்களுக்கான அளவீடுகள் எடுக்கப்பட்டன.
தொடர்ந்து அளவீடுகள் எடுக்கப்பட்ட செயற்கை மூட்டுகளை பயனாளிகளுக்கு மருத்துவ குழுவினர் உதவியுடன் பொருத்துவதற்கான முகாம் கோவை இடையர்பாளையம் பகுதியில் உள்ள மகேஸ்வரி பவன் அரங்கில் நடைபெற்றது.
இதற்கான துவக்க விழாவில்,நாராயண் சேவா சன்ஸ்தான் அமைப்பின் தலைவர் பிரசாந்த் அகர்வால், மகேஸ்வரி சங்கத்தின் தலைவர் கோபால் மகேஸ்வரி, மகேஸ்வரி பவன் செயலாளர் சந்தோஷ் முண்டாடா, சமூக ஆர்வலர்கள் கமல் கிஷோர் அகர்வால், வெங்கடேஷ், சீதாராம், ராஜஸ்தான் சங்கத்தின் தலைவர் கவுதம் ஸ்ரீ ஸ்ரீ மால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் கோவை, ஈரோடு, சேலம் என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா,கேரளா மாநிலங்களில் இருந்து கலந்து கொண்ட 738 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை மூட்டு மற்றும் காலிபர்கள் பொருத்தப்பட்டன. இந்த பணியில் 50க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் ஈடுபட்டனர்.