போக்குவரத்து தொழிலாளர் ஊதியப் பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் இன்னும் ஊதிய ஒப்பந்தம் பேச்சுவார்த்தை குறித்து அரசு பேசவில்லை.
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். காலி பணியிடங்கள் நிரப்புவதில் ஒப்பந்தம் செய்யக்கூடிய பணி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று சென்னையில் தொழிலாளர் இணை ஆணையர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது மழை – வெள்ள நிவாரணப்பணிகளை சுட்டிக்காட்டி, பொங்கல் பண்டிகைக்குப் பிறகு பேசித் தீர்ப்போம் என தமிழக அரசு ஒரு நியாயமான கோரிக்கையை முன்வைத்தது.
அமைச்சர் சிவசங்கரும் அறிக்கை வாயிலாக வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் அது ஏற்கப்படவில்லை. இதை தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தை இரு பிரிவுகளாக தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
பொங்கலுக்கு 6 நாட்கள் முன்பாக போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினால் கடுமையான போக்குவரத்துப் பாதிப்புகள் ஏற்படும். சிறப்புப் பேருந்துகளை இயக்குவது பெரிதும் பாதிக்கப்படும். சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாவார்கள்.
போக்குவரத்துத் தொழிலாளர்கள் முன்வைத் துள்ள கோரிக்கைகள் நியாயமானவைகளாக இருக்கலாம்; அவை பல ஆண்டுகளாக அவர்களால் வலியுறுத்தப்பட்டு வருபவைதான்.
அது தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தி கோரிக்கைகளை இயன்ற வகையில் நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை.
அரசுப் பேருந்துகள் ஓடாமல் நின்று போனால் தமிழர் பண்டிகையாம் பொங்கல் பண்டிகை களை இழந்து போகும். இதனை கவனத்தில் கொண்டு தொழிற்சங்கங்கள் தங்கள் முடிவை அறிவித்து இருக்க வேண்டும்.
எனவே, இரண்டாம் கட்டப் பேச்சுகள் தோல்வியடைந்து விட்ட நிலையில், மூன்றாம் கட்ட பேச்சுகளை உடனடியாக அரசு நடத்த வேண்டும். போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் போக்குவரத்து அமைச்சரே பங்கேற்று தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும்.
ஏதேனும் அரசு உத்தரவாதம் அளித்தால் மட்டுமே வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தவிர்க்க முடியும் என்பதில் ஐயமில்லை. தொழிற்சங்கங்களும் தங்கள் விடாப்பிடியில் இருந்து கொஞ்சம் இறங்கி வரவேண்டும்.
வேலைநிறுத்தம் தொடங்குவதாக அறிவித்த 9ம் தேதிக்குள் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக உடன்பாடு காண வேண்டும். இல்லையேல் வேலைநிறுத்தத்தை ஒத்திவைக்க வேண்டும். இந்த இரண்டில் ஒன்று நடக்க வேண்டும்.
பொங்கல் களைகட்ட அரசுப் பேருந்துகள் ஓடட்டும்!