Homeதலையங்கம்புதுச்சேரி சிறுமி கொலையை வன்மையாக கண்டிப்போம்!

புதுச்சேரி சிறுமி கொலையை வன்மையாக கண்டிப்போம்!

ஒட்டுமொத்த புதுச்சேரியும் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. 9 வயது சிறுமியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து, கொலையும் செய்துள்ளனர் மகாபாவிகள். இதனால், சிறுமியின் குடும்பத்துக்கு ஆதரவாக புதுச்சேரி மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தை துவங்கினர். சிறுமியை கொன்றவர்களை தூக்கிலிட வேண்டும் என்று ஆவேசமாக கூறி வருகிறார்கள்.

கல்லூரி, பள்ளி மாணவர்கள், சமூக அமைப்பினர், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என மொத்த பேரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். சாலைமறியல், சட்டசபை முற்றுகை, கடலில் இறங்கி போராட்டம், ஆர்ப்பாட்டம், போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை என போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனால், கடந்த 2 நாட்களாகவே, புதுச்சேரியில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் புதுச்சேரியில் போதை பொருளை கட்டுப்படுத்தாததை கண்டித்தும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை கண்டித்தும் அரசியல் கட்சிகள் அறிவித்த பந்த் போராட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது. இந்த முழுஅடைப்பில் பந்த் அறிவித்த திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட “இந்தியா” கூட்டணி கட்சியினர் மட்டுமின்றி புதுவை அதிமுகவும் தனியாக பந்த் அறிவித்து அதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.

அனைத்து கட்சியினரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் மாநிலமே வெறிச்சோடிய நிலையில் கண்டனத்தை அமைதியாக வெளிப்படுத்தி வருகிறது. பஸ்கள் ஓடவில்லை, ஆட்டோக்கள் ஓடவில்லை. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அனைத்து தரப்பினரும் தாங்களாகவே முன்வந்து ஆதரவை தெரிவித்து, போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளனர்.

9 வயது சிறுமி காலிகளால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதோடு, கொலையும் செய்யப்பட்டார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சிக்குரிய ஒன்றாகும். வெட்கப்பட வேண்டிய விஷயம்.

மீண்டும் இதுபோன்றதொரு சம்பவம் இனி நாட்டில் எங்குமே நிகழக் கூடாது என்பதன் வெளிப்பாடாகத் தான் இந்த பந்த் போராட்டத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.
சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமையை வன்மையாகக் கண்டிப்போம். அச்சிறுமியின்

குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கல்!

படிக்க வேண்டும்

spot_img