பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் நேருக்குநேர் சந்தித்து எல்லைப் பிரச்சினை குறித்து “மனம்திறந்து” பேசியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சநிலை மாநாட்டுக்கு இடையே, பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்தச் சந்திப்பு கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்தது.
சென்ற 2020ஆம் ஆண்டு, இமாலய எல்லைப் பகுதியில் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்களும் கிட்டத்தட்ட அதே அளவிற்கு சீன வீரர்களும் (இதனை சீனா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை) கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.
எல்லையின் இருமருங்கிலும் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் திரட்டப்பட்டுள்ளனர். இரு நாடுகளின் உயர் ராணுவ அதிகாரிகளுக்கு இடையில் 19 சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தும் பிரச்சினை தீரவில்லை.
இந்நிலையில் தான், இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே தென்னாப்பிரிக்காவில் அரிய சந்திப்பு நடந்துள்ளது.
இந்த சந்திப்பு குறித்து தகவலளித்த இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் க்வத்ரா, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு சுமுகமாக இருப்பதற்கு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு மதிக்கப்படுவது அவசியம் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
அதேபோல “சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு மேம்பட்டால் இரு நாடுகளும் மக்களும் நன்மை அடைவார்கள் என்று அதிபர் ஜி ஜின்பிங் வலியுறுத்தினார்,” என சீன வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
மோதல் போக்கு தலையெடுத்த பிறகு, அதிபர் ஜி ஜின்பிங்கும் பிரதமர் மோடியும் பல்வேறு அரசதந்திரக் கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், கடந்த நவம்பர் மாதம் பாலியில் நடந்த ஜி20 உச்சநிலை மாநாட்டின்போது நிகழ்ந்த சுருக்கமான சந்திப்புக்குப் பிறகு இருவரும் நேருக்குநேர் சந்தித்துப் பேசியிருப்பது இதுவே முதல்முறை.
சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பிரதமர் மோடியும் மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அப்போது இருநாடுகள் இடையே உறவு பலப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் இருநாடுகள் இடையே மோதலையே அதிகரித்தது.
இப்போது இருநாட்டு தலைவர்களும் மனம்விட்டு பேசி இருக்கிறார்கள். இந்தியா எந்த நாட்டு நிலத்துக்கும் ஆசைப்படும் நாடல்ல என்பது உலகறிந்த விஷயம். அதே நேரத்தில் இந்தியா, தனக்கு சொந்தமான ஒரு அடி நிலத்தைக்கூட விட்டுக் கொடுக்காது என்பதிலும் உறுதியாக இருக்கிறது.
ஆகவே, எல்லையில் இந்தியாவின் நிலத்தை அபகரிக்கும் ஆசையை ஆழக் குழிதோண்டி புதைத்துவிட்டு பேச்சுவார்த்தையை சீனா முன்னெடுக்க வேண்டும்.
அப்போது தான் இந்தியா – சீன எல்லைப் பிரச்னைக்கு சுமூகத் தீர்வு ஏற்படும். இது நடந்தால் தான் இருநாட்டுத் தலைவர்கள் மனம்விட்டு பேசியததற்கு ஒரு அர்த்தம் கிடைக்கும்.
இது நடக்க வேண்டும் என்பது தான் இந்திய மக்களின் ஏகோபித்த விருப்பம்.
நடக்குமா என்பது தான் பெரிய கேள்விக்குறி?



