மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னையில் கடந்த 3-ம் தேதி இரவிலிருந்து 5ம் தேதி வரை அதி கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவை அடுத்து அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், ஊழியர்கள் களத்தில் இறங்கி வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்தனர்.
கடந்த மூன்று நாட்களாக இரவு பகல் பாராமல் மீட்பு மற்றும் விசாரணை பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சென்னை தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. மேலும் தாழ்வான பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
முதலமைச்சரின் நேரடி மேற்பார்வையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கடும் சேதங்களைச் சரிசெய்திட இடைக்கால நிவாரணமாக ரூ. 5060 கோடி வழங்கிடக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். மேலும் சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட ஒன்றிய அரசின் குழுவினை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறும் தனது கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த கடிதத்தை அடுத்து நேற்று ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ள சேத பாதிப்புகளைப் பார்வையிட்டார். பின்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது முதலமைச்சர் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை தெரிவித்து, இடைக்கால நிதியுதவி கோரும் கோரிக்கை மனுவை ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் வழங்கினார்.
இதற்கிடையில் முதலமைச்சரின் இடைக்கால நிதி கோரிய கடிதத்தை அடுத்து நேற்று முதற்கட்டமாக ரூ.450 கோடியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. மேலும் சென்னையில் வெள்ள மேலாண்மை என்ற புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து ரூ.561.29 கோடி ஒன்றிய அரசு விடுவித்துள்ளது.
சென்னை இன்னும் முழுமையாக மீளவில்லை. பல பகுதிகளில் வெள்ளம் வடியாமல் மக்கள் அவதியுற்று வருகிறார்கள். மீட்புப் பணிகளும் தொய்வின்றி நடந்து கொண்டிருக்கிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று புயல் நிவாரணப் பணிக்கு முதல்கட்ட நிதியை கேட்ட ஒரே நாளில் வழங்கி ஒன்றிய அரசு உதவி இருக்கிறது. ஒன்றிய அரசின் குழு விரைவில் வந்து வெள்ள சேதத்தைப் பார்வையிட்டு முதல்வர் கேட்ட ரூ.5060 கோடியையும் ஒதுக்கீடு செய்து சென்னையையும் புயலால் பாதித்த அண்டை மாவட்டங்களையும் மீட்டெடுக்க உதவ வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் அன்பான வேண்டுகோள்.
பிரதமர் மோடியின் உதவிக்கரம் சென்னையை நோக்கி தாராளத்துடன் நீளட்டும்!



