சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட அரசு நிகழ்ச்சிகளிலும், விமான நிலையத்தில் அவரை வரவேற்கும் நிகழ்விலும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இல்லாததை சுட்டிக்காட்டி பல்வேறு தரப்பினர் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.
சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ரவி, அமைச்சர்கள் ஆகியோர் அரசு முறை வரவேற்பு கொடுத்தனர். ஆனால், அப்போது தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இல்லை.
அதன் பின்னர் சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம், சென்னை – கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வுகளிலும் அண்ணாமலையை காண முடியவில்லை.
அதை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள காமராஜர் சாலையில் அமைந்து இருக்கும் விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் 125 வது ஆண்டு விழாவில் மோடி பங்கேற்றபோதும், அதை தொடர்ந்து சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற புதிய ரயில் மற்றும் சாலை போக்குவரத்து திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்வுகளிலும் அண்ணாமலையை காண முடியவில்லை.
பெரும்பாலான நிகழ்வுகளில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் போன்றோரே உடன் இருந்தார்கள்.
இந்த நிலையில் அதிமுகவுடனான கூட்டணி மோதல், தமிழ்நாடு பாஜகவிற்குள் வெடித்து இருக்கும் உட்கட்சி பூசல், முக்கிய நிர்வாகிகளின் விலகல், மாநில தலைமை மீது தேசிய தலைமைக்கு செல்லும் அடுக்கடுக்கான புகார்கள் போன்றவற்றால் அண்ணாமலை மீது டெல்லி தலைமை அதிருப்தியில் இருப்பதாகவும், இதனாலேயே அண்ணாமலை பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ளவில்லை என்றும் விமர்சனங்கள் வந்தன.
அதேபோல், கூட்டணி கட்சியான அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரதமரை தனித்தனியாக சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டதாகவும், ஆனால் இந்த சந்திப்பு நடைபெறவில்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கும் பல்வேறு காரணங்களை பல்வேறு தரப்பினர் தெரிவித்து வந்தனர்.
குறிப்பாக அதிமுக உட்கட்சி பூசலில் நேரடியாக தான் தலையிடுவதைபோல் இருக்கும் என்பதால் பிரதமர் நரேந்திர மோடி இந்த சந்திப்பை தவிர்த்ததாக கூறப்பட்டது.
கர்நாடகா தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை முடிவு செய்யும் பணியில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருடன் டெல்லியில் அண்ணாமலையார் இருப்பதால், பிரதமரின் சென்னை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை என்ற பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தமிழ்நாட்டு அரசியலில் குழப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருப்பதே உண்மை. அண்ணாமலை ஓரங்கட்டப்படுகிறாரா என்ற சந்தேம் எழாமல் இல்லை.
அரசியலில் இதெல்லாம் சகஜம் தானே… விரைவில் எல்லாவற்றும் விடை கிடைக்கும்!



