உலக யோகா தினத்தை முன்னிட்டு பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பயனீர் மேல்நிலைப்பள்ளியில் நடந்து வரும் தேசிய மாணவர் படை பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ள மாணவ, மாணவிகள் அருகே செல்வபுரத்தில் உள்ள கட்டாஞ்சி மலை பகுதியில் யோகாசனங்களை செய்து காண்பித்ததனர்.
ஜோதிபுரத்தில் உள்ள பயனீயர் மேல் நிலைப் பள்ளியில், கோவை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி பள்ளிகள், சர்வஜன மேல்நிலைப்பள்ளி, பி. எஸ்.ஜி. கல்லூரி உள்ளிட்ட 13 கல்வி நிறுவனங்களில் உள்ள என்சிசி மாணவ, மாணவர்கள் பங்கேற்றுள்ள 10 நாள் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் புதன்கிழமை உலக யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவை பயனீயர் கல்வி நிலையங்களின் செயலர் அபர்ணா ராஜ்குமார் தொடங்கி வைத்தார். பயனீயர் கல்வி நிலையங்களின் நிர் வாக அதிகாரி பத்மநாபன் முன்னிலை வகித்தார்.
சுமார் 450-க்கும் மேற்பட்ட தேசிய மாணவர் படையினர் மைதானத்தில் வரிசையாக அமர்ந்து பல்வேறு யோகா சனங்களை செய்து காண்பித்தனர். பின் னர் அவர்கள் அனைவரும் செல்வ புரத்தில் உள்ள கட்டாஞ்சி மலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு வசுதைவ குடும்பம் என்ற தலைப்பில் கொண்டாடப்படும் யோகா தினத்தின் முக்கியத்துவம் குறித்து முகாமின் கமாண்டிங் அலுவலர் மேஜர் பி.அசோக்குமார் விளக்கினார்.
இயற்கையோடு இணைந்து வாழ்ந்த துறவிகளால் தோற்றுவிக்கப்பட்ட யோகா வின் அத்தியாவசிய தேவை, முக்கியத்துவம், இன்றைய இளைய சமுதாயத்தினர் இதை பின்பற்ற வேண்டியதன் நோக்கம் குறித்து உதவி கமெண்டிங் அலுவலர் விஜயகுமார் ரெட்டி விளக்கினார்.
பின்னர் மூச்சுப் பயிற்சி, பத்மாசனம், வஜ்ராசனம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட யோகாசனங்களை மலைமுகடுகளில் பாறைகளில் அமர்ந்து தேசிய மாணவர் படையினர் செய்து காண்பித்தனர்.
இப்பள்ளிகளைச் சேர்ந்த என்சிசி அலுவலர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பயனீயர் மேல்நிலைப் பள்ளியின் என்சிசி அலுவலர் என் ராஜ்மோகன் செய்து இருந்தார்.