சாந்தி ஆசிரம்,சமய நிறுவனங்கள், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், மற்றும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்காக ஒருமைப் பயணத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது.
நேற்று 21ஆம் தேதி நடைபெற்ற பள்ளிமாணவர்களுக்கான ஒருமைப்பயணத்தில் கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு பயணத்தை மிகச்சிறப்பான முறையில் துவங்கி வைத்ததோடு, அருமையான ஆழமான கருத்துகளை அறிவியல், கலாச்சாரம் மற்றும் ஆன்மீக ரீதியான ஒருமைப்பாட்டிற்கு விளக்கம் கூறினார்கள்.
மேலும்,அவர் கூறுகையில்,” உயிரினங்களுக்கு இடையே இருந்த ஒற்றுமைகளை ஆராய்ச்சி செய்த டார்வினின் உழைப்பு பரிமாண வளர்ச்சிக் கோட்பாட்டிற்கு அடிப்படையாக அமைந்தது. ஆனால் உயிரினங்களுக்கு இடையேயான வேற்றுமைகளை ஆராய்ந்த கால்டனின் முடிவுகள் மனித இனத்தில் பிரிவினையை உண்டாக்கி பல போர்களுக்கு வழிவகுத்தது. எனவே நாம் அனைவரும் சமம் வேற்றுமைகளை புறந்தள்ளி ஒற்றுமைகளை அறிந்து கொண்டு மத நல்லிணக்கத்திற்கு வழிவகுப்போம்” என்றார்.
இந்த பயணத்தில் 14 பள்ளிகளை சார்ந்த 70 குழந்தைகளும் 15 தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்களும் கலந்து கொண்டனர். முன்னதாக சாந்தி ஆசிரமத்தின் இளைஞர் தலைமைப்பண்பு பகுதியின் தலைவர் விஜயராகவன் நிகழ்ச்சியின் வரவேற்புரையும் நோக்கங்களையும் எடுத்துக் கூறினார். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பில் உறுதுணையாக ஜமாஅத் ஹி இஸ்லாமி ஹிந்த் செயலாளர் அப்துல் ஹக்கீம் பயணத்தில் கலந்து கொண்டார்.
இந்த பயணமானது கோவை கோனியம்மன் கோவிலில் துவங்கி, குருத்வாரா சிங் சபா, அத்தார் ஜமாஅத் மஸ்ஜித், ஜெயின் கோயில், பிஷப் பேராலயத்திற்கும் மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். நிகழ்ச்சியின் நிறைவு போத்தனூர் காந்தி நினைவகத்தில் நிறைவடைந்தது.