நாடாளுமன்றத்தில் புகை குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் ஒன்றிய அரசு இந்த தாக்குதலுக்கு விளக்கம் கொடுக்காமல் கேள்வி கேட்கும் எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்து வருகிறது.
இந்த கூட்டத் தொடரில் மட்டும் இதுவரை 92 எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் ஒரே நாளில் 78 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர்.
இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, “எதிர்க்கட்சியினர் இல்லாத நாடாளுமன்றத்தில் எல்லா மசோதாக்களையும் எந்தவித எதிர்ப்புமின்றி நிறைவேற்ற மோடி அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறது.
பாதுகாப்பு குறைபாடு குறித்து விவாதம் நடத்தக் கேட்ட மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களை, மோடி அரசாங்கம் நீக்கியிருப்பது யதேச்சதிகாரம்“ என கண்டனம் தெரிவித்துள்ளார்.
எம்பிக்கள் சஸ்பெண்டு ஜனநாயக விரோதச் செயல் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டித்துள்ளார். மேலும், எதிர்க்கட்சி கட்சி தலைவர்கள் மட்டுமல்லாது சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இத்தனை உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டிய அளவிற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அப்படி என்ன செய்து விட்டார்கள்? மற்ற நிகழ்ச்சிகளை ஒத்தி வைத்துவிட்டு, இந்தப் பிரச்சினைமீது அவையில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதில் குற்றம் என்ன இருக்கிறது? தங்களின் அடிப்படையான கடமையைச் சரியாகவே செய்திருக்கிறார்கள். ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களை மட்டுமல்ல; எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் மக்கள் வாக்களித்துதான் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதை மறக்கலாமா? இந்த விஷயத்தில் ஆளும்கட்சி மிகப்பெரிய தவறைச் செய்துள்ளது.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று, பிரச்சினை குறித்து விவாதிக்காமல், மக்களவையில், மாநிலங்களவை யில் பேசுவதற்கான வாய்ப்பு மறுக்கப்படும் நிலை ஏற்பட்டு இருப்பது ஜனநாயகத்திற்கு வேட்டு வைக்கும் செயலாகத் தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
அதிக எண்ணிக்கையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்ற காரணத்தால் எதையும் செய்துவிடலாம் என ஒற்றைக் கட்சி நாடாளுமன்றமாக மாற்றிட முயன்றால் அது விபரீதமாகி விடும்.
காற்றடித்த பெரிய பலூன் ஒரே ஒரு குண்டூசியால் வெடித்துவிடும் அல்லவா? ஜனநாயகம் என்ற குண்டூசியை எதிர்க்கட்சிகள் கையிலெடுத்து மக்கள் மன்றத்திற்கு வந்து ஜனநாயகத்துக்கான குரலை எழுப்பவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஜனநாயகம் தழைக்க வேண்டும்; தழைக்கட்டும்!



