fbpx
Homeதலையங்கம்ஓபிஎஸ்- இபிஎஸ் வேட்பாளர்கள் நேரடி போட்டி!

ஓபிஎஸ்- இபிஎஸ் வேட்பாளர்கள் நேரடி போட்டி!

அதிமுகவின் நீண்ட காலப் பொதுச்செயலாளர் மட்டுமின்றி, நிரந்தரப் பொதுச்செயலாளர் என்று அந்த கட்சியினரால் அழைக்கப்பட்ட ஜெயலலிதா 2016ம் ஆண்டு டிசம்பரில் மறைந்தார்.

இதற்கு பிறகு அதிரடி சினிமாக் காட்சிகளை மிஞ்சும் நிகழ்வுகள் அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறின. குறிப்பாக, விகே சசிகலா தற்காலிக பொதுச் செயலாளராக தேர்வு, ஓபிஎஸ் தர்மயுத்தம், தமிழ்நாட்டுக்கு வராத ஆளுநர், சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு, சிறைக்கு சென்ற சசிகலா, இணைந்த ஓபிஎஸ் – இபிஎஸ், ஆர்.கே.நகரில் டிடிவி தினகரனின் அபார வெற்றி, பதவி நீக்கம் செய்யப்பட்ட டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் என பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் இருந்தன.

ஒரு கட்டத்தில், அமமுக என்கிற தனிக் கட்சி தொடங்கி ஜனநாயக ரீதியில் அதிமுகவை மீட்போம் என்று டிடிவி தினகரன் பயணிக்கிறார். ஜெயலலிதாவிற்கு பிறகு பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட வி.கே.சசிகலா சட்டப் போராட்டம் நடத்தி அதிமுகவை மீட்பேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில், கடந்த ஜூன் மாதம் அதிமுகவில் ஒற்றைத் தலைமை முழக்கத்தால் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இடையில் விரிசல் ஏற்பட்டது.

இருவரும் இணைந்து, சசிகலா, தினகரனை நீக்கிய பின்னர் இரட்டை இலையின் இரண்டு இலைகளாக வர்ணிக்கப்பட்ட இருவரும் தனித் தனி பாதையில் பயணிக்கின்றனர்.

இவர்களின் நிலை என்னவாகும்? அதிமுகவின் அதிகாரம் யாருக்கு? என்பதில் நீதிமன்றமும் இன்னும் முழு தீர்ப்பை அளிக்கவில்லை. தேர்தல் ஆணையத்தின் முடிவும் தெளிவாக்கப்படவில்லை.

இந்த நிலையில் தான் எதிர்பாராத விதமாக ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுக போட்டியிடும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை பேட்டி அளித்த ஓ.பன்னீர்செல்வம், ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடுவோம் என்றும் அதிமுக வேட்பாளரை நிறுத்துவோம் என்றும் அறிவித்துள்ளார்.

ஆக, அதிமுகவின் ஓபிஎஸ். இபிஎஸ் தரப்புகள் நேருக்கு நேர் போட்டியிடுவது உறுதியாகி விட்டது. ஆனால் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்பதில் சிக்கல் உருவாகி உள்ளது. இரு தரப்பினரும் இரட்டை இலை சின்னத்தை கோருவார்கள். ஆனால் இரட்டை இலை முடக்கப்படுவதற்கே அதிக வாய்ப்பு உள்ளது.

இரட்டை இலை சின்னத்தை முடக்க ஒருபோதும் தான் காரணமாக இருக்க மாட்டேன் என்றும் இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டாலும் போட்டியிடுவோம் என்றும் ஓ.பன்னீர்செல்வம் மேலும் இன்று அறிவித்து உள்ளார். அதே நேரத்தில் பாஜக போட்டியிட்டால் விட்டுக் கொடுப்போம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டாலும் எடப்பாடி தரப்பும் தங்கள் வேட்பாளரை களமிறக்குமா? அல்லது பாஜகவுக்கு விட்டுக் கொடுக்குமா?

பொறுத்திருத்து பார்ப்போம்!

படிக்க வேண்டும்

spot_img