fbpx
Homeதலையங்கம்வெளிப்படையாக நடக்கும் தேர்தல் விதிமீறல்கள்!

வெளிப்படையாக நடக்கும் தேர்தல் விதிமீறல்கள்!

தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஹைதராபாத் தொகுதி பாஜக வேட்பாளர் மாதவி லதா, இருவாரங்களுக்கு முன் மசூதியை நோக்கி வில் அம்புகளை ஏவுவதுபோல் செய்கை செய்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு கண்டனம் வலுத்ததால், அந்த வீடியோவால் யாரின் மனமாவது புண்பட்டு இருந்தால், நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் அனைவரையும் மதிக்கிறேன் என்று பாஜக வேட்பாளர் மாதவி லதா கூறி நழுவினார்.

இந்த சர்ச்சை இன்னும் ஓயக்கூட இல்லை. அதற்குள் அதே பாஜக வேட்பாளர் மாதவி லதா, நேற்று ஹைதராபாத்தில் வாக்களித்த வந்த இஸ்லாமியர்களின் அடையாள அட்டையை சோதனை செய்ததோடு பர்தாக்களை அகற்றச் சொல்லி, இழிவு படுத்தி இருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரே மாதிரியான தவறை மீண்டும் செய்து தேர்தல் விதியை அப்பட்டமாக அவர் மீறி இருக்கிறார்.
இது குறித்து வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், அவரின் இந்த அப்பட்டமான தேர்தல் விதிமீறல் செயலுக்கு பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

அரசியல் கட்சி தலைவர்கள் பலரும், தங்களது கண்டனங்களை முன்வைத்த நிலையில், வேறு வழியின்றி, இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் நோக்கில் செயல்பட்ட பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது தேர்தல் ஆணையம்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பிரச்சாரங்கள் தொடங்கியது முதலே, இஸ்லாமியர்கள் மீது பாஜக வெறுப்பை உமிழ்ந்து வருகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு இதோ ஆதாரம் என்பது போல இவ்விரு சம்பவங்களும் ஒரே நபரால் அரங்கேறி உள்ளன.

கடந்த தேர்தல்களில் எல்லாம் இலைமறை காயாக இருந்த தேர்தல் விதிமீறல்களை தற்போதைய தேர்தலில் கண்கூடாக அதிகளவில் பார்க்க முடிகிறது. தேர்தல் விதியை மீறிவிட்டு எதிர்ப்பு அதிகமானால் மன்னிப்பு கேட்டால் போதும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம், என்பது அரசியல்வாதிகள் போடும் கணக்கு. தேர்தல் ஆணையம் மீது பயமில்லாததால் தான் இப்படியெல்லாம் நடக்கத் துணிகிறார்கள். தேர்தல் ஆணையம் என்ன பெரிதாக தண்டனை தந்து விடப்போகிறது? என்ற எண்ணம் தான் அவர்களிடம் மேலோங்கி இருக்கிறது.

இதெல்லாம் தப்புக் கணக்கு என்று அரசியல்வாதிகளை அச்சப்பட வைக்கும் வகையில் என்றைக்கு தேர்தல் ஆணையம் தன்வசம் உள்ள அதிகாரச் சாட்டையை அதிவேகமாக சுழற்றத் தொடங்குமோ அன்றைக்குத் தான் விதிமீறல்கள் குறையும். அதற்கான அதிரடி நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் முன்னெடுக்க வேண்டும்!

படிக்க வேண்டும்

spot_img