கோவை வெள்ளலூர் அருகே ஆன்லைன் ரம்மி விளையாடியதால் பட்டதாரி இளைஞர் மதன்குமார் என்பவர் பார்வை குறைபாடு மற்றும் தலைவலி பாதிப்பால் ஏற்பட்ட மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த இளைஞர் பணத்தை இழந்தது மட்டுமல்லாமல் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாடியதில் அவர், உடல் பிரச்சினைகளையும் சந்தித்திருப்பது புதிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ஆன்லைன் சூதாட்டம் எந்த அளவுக்கு மனிதகுலத்தை வேட்டையாடுகிறது என்பதற்கு இது தான் எடுத்துக்காட்டு. ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு நிகழ்ந்திருக்கும் 45 ஆவது தற்கொலை இதுவாகும்.
ஆன்லைன் சூதாட்டத்தில் உயிர்ப் பலி நடக்கும் போதெல்லாம் இது 10வது, 20 வது, 30வது என்று ஒவ்வொரு முறையும் பட்டியலிட்டு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் போன்ற தலைவர்கள் கண்டித்து வருகிறார்கள்.
ஆன்லைன் சூதாட்டம் ஒழிக்கப்பட வேண்டும் என்பது தான் அனைவரின் கோரிக்கை ஆகும். அதற்காக திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் நிறைவேற்றப்பட்டு 125 நாட்களாகியும் அந்த சட்டத்திற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்கவில்லை. இது நியாயமா?. நியாயம் கற்பிக்க யாரும் முன்வர மாட்டார்கள். ஆனால் ஆளுனருக்கு மட்டும் அது நியாயமாகப்படுகிறதே?
ஆன்லைன் சூதாட்டமும், அதற்கு அடிமையாகி இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கதையாவதை இனியும் அனுமதிக்க கூடாது. எனவே, ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்; அதை தமிழக அரசும் உறுதி செய்ய வேண்டும்.
ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழகத்தில் உயிரிழப்பு நிகழும்போதெல்லாம் நாமும் ஆன்லைன் சூதாட்டத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழிக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறோம்.
ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் ஒவ்வொரு உயிர்ப்பலிக்கும் தமிழ்நாடு ஆளுநரே காரணம் என்று பல்வேறு கட்சியினரும் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றனர். ஆனால் அதெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காக பயனற்றுப் போய் விடுகிறது.
மனித உயிர் விலை மதிப்பற்றது. சாலையில் ஆம்புலன்ஸ் வந்தால் வாகனத்தை ஓரம்கட்டி அதற்கு வழிவிடுகிறோம். ஆம்புலன்ஸ் விரைவில் சென்றால் ஒரு உயிர் காப்பாற்றப்படும் என்ற உந்துதல் நமக்குள் தானாகவே ஏற்படுகிறது.
ஆனால் ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியாக இன்னொரு உயிர் தயாராகிக் கொண்டிருப்பது தெரிந்தும் அதனைத் தடுக்க முடியாமல் இருப்பது துரதிர்ஷ்டம் தான்.
ஆன்லைன் தடைச்சட்டத் திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு அனுப்பி பல மாதங்கள் ஆகி விட்டன. ஆளுநர் ஒப்புதலையும் அளிக்க வில்லை. அதற்கான விளக்கமும் அளிக்கப்படவில்லை.
ஆளுநர் அவர்கள், இனியும் தாமதம் செய்யாமல் ஆன்லைன் சூதாட்டத் தடைச்சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. அடுத்த மரணம் நிகழும் முன் இந்த எதிர்பார்ப்பு நிறைவேறும் என்பது குதிரைக் கொம்பு தான் என்றாலும் ஆளுநர் மனமிறங்கி ஏதேனும் மிரக்கிள்
நடந்து விட்டால்…
அதைவிட நல்ல விஷயம் வேறு என்ன இருக்கப் போகிறது?.