fbpx
Homeதலையங்கம்ஒரே நாடு ஒரே தேர்தல்- எடப்பாடி ‘அந்தர் பல்டி’!

ஒரே நாடு ஒரே தேர்தல்- எடப்பாடி ‘அந்தர் பல்டி’!

இந்திய தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத் தேர்தலையும், மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் களையும் தனித்தனியாக நடத்தி வருகிறது. இந்த நிலையில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற நடைமுறையை கொண்டுவர மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இதற்கு நாட்டில் அடிக்கடி தேர்தல் நடத்துவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது, அதிக செலவு ஏற்படுகிறது என காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஆனால் அதிமுகவின் நிலைப்பாடு, மாறி மாறி வந்திருக்கிறது. 2015ல் தமிழ்நாடு முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்த போது, ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு ஆதரவாக நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் அதிமுக அறிக்கை அளித்தது.

2018ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியின் போது, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ விவகாரம் தொடர்பாக சட்ட ஆணையம் அனுப்பிய கடிதத்திற்கு அப்போதைய தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

அம்மா ஜெயலலிதாவின் கொள்கைகளை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம் எனக் கூறி ஆட்சிக் கட்டிலில் ஏறிய எடப்பாடி பழனிசாமி அந்தர் பல்டி அடித்தார். ‘தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் 2021ஆம் ஆண்டு வரை இருந்த நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்தினால், தமிழக சட்டமன்றத்தின் ஆயுட்காலம் குறைக்கப்படும். எனவே, அதிமுகவின் ஆதரவு இல்லை’ என்று எழுத்துப்பூர்வமாக தெரிவித்திருந்தது.

டெல்லியில் நடைபெற்ற சட்ட ஆணையக் கூட்டத்தில் அதிமுகவின் தம்பிதுரை, சி.வி.சண்முகம் பங்கேற்று 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலுடன் அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்துவதை எதிர்க்கிறோம் என தெரிவித்தனர்.

இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் சட்ட ஆணையம் அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்டபோது, அ.தி.மு.க-வின் நிலைப்பாட்டைப் பொறுத்தவரை ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு ஆதரவு அளிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆட்சியில் இருந்தபோது ஒரு நிலைப்பாடு, எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு என எடப்பாடி பழனிசாமியின் செயல் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது, 2024ஆம் ஆண்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை செயல்படுத்த பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் வரும் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அப்போது மத்திய அரசு ‛ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் குறித்த சாத்தியக்கூறுகளை ஆராய மத்திய அரசு முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்புக் குழுவையும் அமைத்து இருக்கிறது. இதனால் தற்போது மீண்டும் “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டம் விவாதப்பொருளாகி உள்ளது.

இந்நிலையில், இந்த திட்டத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பதவிக்காக சந்தர்ப்பவாத முடிவெடுக்கிறார் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இன்றைக்கு விமர்சனங்களைப் பற்றி யார் கவலைப்படுகிறார்கள்?

படிக்க வேண்டும்

spot_img