நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிலேயே இத்திட்டத்தை அமல்படுத்த ஒன்றிய பாஜக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.
இத்திட்டத்துக்கு திமுக, கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் எதிர்க்கட்சியான அதிமுக ஆதரவு தெரிவித்துள் ளது. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அரசின் செலவை குறைக்குமென அதிமுக தரப்பில் சொல்லப்படுகிறது.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்த திமுக, தனது கருத்தை டெல்லியில் உள்ள சட்ட ஆணையத்தில் பதிவு செய்துள்ளது.
திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன், சட்ட ஆணையத்தில் நேரடியாக அளித்தார். அதில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம் ஆகும். எனவே, இந்த திட்டத்தைக் கைவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான காரண காரியங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதில் விளக்கி உள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அதிபர் ஆட்சியை மறைமுகமாகக் கொண்டு வருவது போல் அமையும் என்ற எச்சரிக்கையையும் அரசியல் கட்சிகள் முன்வைத்து ஒலியெழுப்பி வருகின்றன.
ஆனாலும் போதிய ஆலோசனைகள் மேற்கொள்ளாமல் 2024 நாடாளுமன்றத் தேர்தலிலேயே ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வர ஒன்றிய அரசு அவசரம் காட்டுவது தான் சந்தேகத்தை எழுப்பி உள்ளது.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை காரணம் காட்டி மாநில ஆட்சியைக் கலைக்க கூடாது. இந்த திட்டத்தில் அவசரம் காட்டுவது ஒருபோதும் நன்மை தராது. எதிர்விளைவுகளையேத் தரும் என்பதில் ஐயமில்லை.
வேண்டாம் விபரீத விளையாட்டு!