தமிழ்நாடு வந்த பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சந்திக்கவோ, வரவேற்கவோ அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
ஆனால் திருச்சி விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பிரதமர் மோடி சந்தித்தார். ஏற்கனவே அமித்ஷா சென்னை வந்தபோதும் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்கவில்லை. அவரை பாஜக ஓரங்கட்டுகிறது என்பது வெள்ளிடைமலையாகத் தெரிகிறது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் அரசியல் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக &- பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ள நிலையில், செப்.4ல் மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மாநாடு நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. ஓ.பன்னீர்செல்வத்திற்கு இன்னும் தேனி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் ஆதரவு இருந்து வருகிறது. ஆனால் கூட்டணியில் இணைத்துக் கொள்ள ஏதுவாக அவர் இதுவரை தனிக் கட்சியை தொடங்கவில்லை. இன்னும் அதிமுக தொண்டர் மீட்புக் குழு என்பதையே நடத்தி வருகிறார்.
அதிமுகவோடு மீண்டும் இணைந்து செயல்படுவதே அவரது நோக்கமாக இருக்கிறது. அதிமுகவில் தன்னை இணைத்துக் கொள்ள எந்த நிபந்தனையும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் இறங்கி வந்த போதிலும், எடப்பாடி பழனிசாமி இதுவரை செவிசாய்க்கவில்லை.
இது ஒருபுறமிருக்க, திமுக அரசை கண்டித்தே தொடர் விமர்சனங்களை முன்வைத்து வந்த ஓ.பன்னீர்செல்வம், நேற்றைய தினம் தனது பாதையை திடீரென மாற்றி ஓர் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு வலுசேர்க்கும் வகையில் கல்விக்கான நிதியை விடுவிக்க வேண்டும் என்ற வலியுறுத்தலோடு மத்திய அரசின் செயலைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தன்முன் நிற்கும் பிற வாய்ப்புகளை ஆராய வேண்டிய நிலைக்கு வந்துள்ளார். தனிக் கட்சித் தொடங்கி பாஜக மூலமாக அதிமுகவிடம் இருந்து சில தொகுதிகள் பெற முயற்சிக்கலாம். அதேபோல் பாஜகவில் இணைந்து அரசியல் பயணத்தை தொடரலாம்.
ஆனால் நேற்றைய அறிக்கை தன்னைத் தொடர்ந்து புறக்கணிக்கும் பாஜகவை விலக்க ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்து விட்டதையே வெளிப்படுத்துகிறது.
அவரது அணியில் இருக்கும் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் அதையே தான் அறிவுரையாக கூறுகின்றனர். பாஜகவை விட்டு விலகும்பட்சத்தில் வேறு வழி என்னென்ன? மாற்றுக் கட்சிகளான திமுக, தவெக, அமமுக உள்ளிட்ட கட்சிகளில் இணையலாம். திமுகவில் இணைவது என்பது ஓ.பன்னீர்செல்வத்தின் கடைசி சாய்ஸாகத்தான் இருக்கும்.
திராவிட இயக்கத்திலிருந்து வந்தவர் என்ற அடிப்படையிலும், மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர் என்பதன் அடிப்படையிலும் ஓ.பன்னீர் செல்வத்தின் அனுபவம் கிடைத்தால் அது விஜய்க்கு மிகப்பெரும் ஆதரவாக மாறும் என்ற விவாதமும் நடந்து கொண்டிருக்கிறது.
அவர் எந்த முடிவெடுத்தாலும், வருகிற 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுக்கு போட்டியிட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்றால், அவர்கள் விரைவில் எடப்பாடி பழனிசாமி பக்கமாகச் சாய்ந்துவிடுவார்கள் அல்லது வேறு அரசியல் பாதையை ஏற்படுத்திக்கொள்வார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
ஓ.பன்னீர்செல்வம் ஒருபோதும் அரசியல் சந்நியாசம் போக மாட்டார் என்பது உறுதி. ஆக, இதற்கெல்லாம் என்ன தான் விடை? மதுரை மாநாட்டில் புதிய முடிவை அவர் அறிவிப்பாரா அல்லது அதற்கு முன்னதாகவே முடிவை அறிவித்து மாநாட்டை நடத்துவாரா?
பொறுத்திருந்து பார்ப்போம்!



