fbpx
Homeதலையங்கம்மிரட்டும் டெங்கு - நிபா!

மிரட்டும் டெங்கு – நிபா!

தமிழகத்தில் கடந்த 8ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை 120 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

நேற்று முன் தினம் அதாவது 14 ஆம் தேதி ஒரே நாளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 18 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு என தனியாக வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் தேவையான மருந்து மாத்திரைகளும் கையிருப்பில் உள்ளன.

தினசரி டெங்கு பாதிப்பு சராசரியாக 15 முதல் 20 வரை பதிவாகி வருகிறது. டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வீடுகள் தோறும் சென்று குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்ய சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த டெங்குவை பரப்பும் ஏடீஸ் வகை கொசுக்கள் நன்னீரில் மட்டுமே முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். தமிழகத்தில் அவ்வப்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது, இதனால் யாருக்கெல்லாம் காய்ச்சல் பாதிப்பு இருக்கிறது என்பதை கண்டறிய வேண்டும். மேலும் ஏடீஸ் கொசு உற்பத்தியை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

திறந்த வெளியில் இருக்கும் பிளாஸ்டிக் பைகள், டயர்கள் போன்றவற்றை அகற்ற வேண்டும். டெங்கு தடுப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்தால் ரத்தக்கசிவு ஏற்படும். இதனால் நோயாளிக்கு ரத்தம் ஏற்றுவது முக்கியமானது. இதனால் ரத்த வங்கிகளில் போதுமான அளவுக்கு ரத்தம் இருப்பதையும் உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்பதால் டெங்கு பாதிப்பு மேலும் அதிகரிப்பதை தடுக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் இன்றைய தினம் அவசர ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. டெங்கு தடுப்பு நடவடிக்கைள் தீவிரப்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல நமது அண்டை மாநிலமான கேரளாவில் மீண்டும் இப்போது நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவை காட்டிலும் நிபா வைரஸ் பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் அதிகம் என்பதால் இது அங்கே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாகக் கேரளாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்வோரும் திரும்புவோரும் அதிகம். அண்டை மாநிலமான தமிழகத்திற்கு வந்து செல்வோரும் அதிகம். கொரோனா கூட இந்தியாவில் கேரளாவில் தான் முதலில் கண்டறியப்பட்டது.

கேரளாவில் ஒரு நோய் பரவினால் தமிழகத்திற்கு மிக எளிதாக பரவ வாய்ப்பு உள்ளது. அதனைத் தடுக்க எல்லைகளில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

சுற்றுப்புறத்தில் மழைநீர் தேங்காமல் கண்காணித்தும் தூய்மையாக பராமரித்தும் டெங்கு காய்ச்சலை ஒழிப்போம்! முககவசம் அணிந்து நிபா வைரஸை அண்டவிடாமல் விரட்டுவோம்!

பொதுமக்களே, உஷாராக இருங்கள்!

படிக்க வேண்டும்

spot_img