எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட் மருத்துவர்கள், முற்றிய நிலை நாக்கு புற்றுநோயால் (ஸ்குவாமஸ் செல் கார்சினோமா) பாதிக்கப்பட்ட புகைப்பிடிக்கும் பழக்கமுள்ள 41 வயது ஆணுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளித்துள்ளனர். சுமார் 5 × 3 செ.மீ அளவுள்ள இக்கட்டி செங்குத்தாக பரவி, நாக்கின் முன்பகுதி முழுவதும், வாயின் அடிப்பகுதி மற்றும் நாக்கை தாங்கும் மேல் கழுத்து எலும்பான ஹையாய்டு எலும்பு வரை பரவியிருந்ததால், எம்ஜிஎம் மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பு வேறு பல மருத்துவமனைகளில் இதற்கு அறுவை சிகிச்சை செய்ய இயலாது என்று இந்நோயாளிக்கு தெரிவிக்கப்பட்டது.
இந்நோயாளிக்கு ‘காம்போசிட் ரிசெக்ஷன்’ எனப்படும் ஒரே நேரத்தில் செய்யப்படும் விரிவான அறுவை சிகிச்சை செயல்முறை மேற்கொள்ளப்பட்டது. இது புற்றுநோய் பாதித்த திசுக்கள் அனைத்தையும் அகற்றுவதை நோக்கமாகக் கொண்டது.
இதில் நாக்கின் முன்பகுதியை முழுமையாக அகற்றுதல் (ஆண்டீரியர் டோட்டல் குளோசெக்டோமி), வாயின் அடிப்பகுதியில் உள்ள புற்றுநோய் பாதித்த திசுக்களை அகற்றுதல் மற்றும் தாடை எலும்பின் பாதிக்கப்பட்ட பகுதியை அகற்றுதல் (செக்மெண்டல் மேண்டிபுலெக்டோமி) ஆகியவையும் அடங்கும். இந்தச் செயல்முறையில் ஹையாய்டு எலும்பையும் அகற்றுவது அவசியமாக இருந்தது.
புற்றுக்கட்டி முழுமையாக அகற்றப்பட்ட பிறகு, மருத்துவர்கள் ‘ஃப்ரீ ஃபிளாப் மறுசீரமைப்பு’ என்ற நவீன உத்தியைப் பயன்படுத்தி நாக்கு மற்றும் வாயை மறுவடிவமைப்பு செய்தனர். இதில் உடலின் மற்றொரு பகுதியிலிருந்து ஆரோக்கியமான திசு எடுக்கப்பட்டு நாக்கில் இயல்பான வடிவத்தையும், அதன் செயல்பாட்டையும் திரும்பவும் கொண்டுவருவதற்காக பயன்படுத்தப்பட்டது.
சிகிச்சையின் இறுதி நடவடிக்கையாக, நுண்ணிய அளவில் எஞ்சி இருக்கக்கூடிய புற்றுநோய் செல்களை அழிக்கவும், முழுமையான புற்றுநோய் கட்டுப்பாட்டை உறுதி செய்யவும் கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த நுட்பமான செயல்முறைகளை பல்வேறு துறைகளின் நிபுணர்கள் இடம்பெற்றிருந்த மருத்துவ வல்லுநர்கள் கொண்ட குழு மேற்கொண்டது.
இக்குழுவில் புற்றுநோயியல் துறையின் இயக்குனரும் மற்றும் முதுநிலை நிபுணருமான டாக்டர் எம்.ஏ. ராஜா, அறுவைசிகிச்சை புற்றுநோயியல் துறையின் தலைவரும், முதுநிலை நிபுணருமான டாக்டர். சிவராம் கணேசமணி, டாக்டர் மணிகண்டன் வெங்கடசுப்பிரமணியன், மூத்த ஆலோசகர் அறுவை சிகிச்சை புற்றுநோயியல் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ. சிவ குமார் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.



