காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு வரும் தண்ணீர் பாதிக்கப்படும் என்பதால் தமிழக அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மேகதாது அணை கட்டியே தீருவோம் என கர்நாடக அரசியல்வாதிகள் கூறிவந்தாலும் அதை எந்த வகையிலும் அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக அரசு உறுதிபட கூறி வருகிறது.
இதனிடையே, கர்நாடக மாநில துணை முதல்வரும், நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷேகாவத்தைச் சந்தித்து மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் இதுகுறித்து அவர் நீர்வளத்துறை அமைச்சரிடம் கடிதம் அளித்துள்ளார்.
அந்த கடிதத்தில், கர்நாடக அரசின் நீர்ப் பாசனத் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், நதிநீர்ப் பங்கீடு பிரச்சினைக்கு புதிதாக ஒரு தீர்ப்பாயத்தை ஏற்படுத்தும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவிரி நதி நீர் விவகாரத்தை கையாளும் பொறுப்பை காவேரி மேலாண்மை வாரியத்திடம் உச்ச நீதிமன்றம் ஒப்படைத்து விட்டது. எனவே வழக்கு தீர்ந்து இதுதான் முடிவு என்று அறிவிக்கப்பட்டு விட்டது.
இதனைக் கருத்தில் கொள்ளாமல் கண்டபடி டி.கே.சிவகுமார் பேசுவது சட்டப்படி தவறு. கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தை கவனிப்பதெற்கென்று உச்ச நீதிமன்றத்தில் வாரியம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதனைச் சுட்டிக்காட்டி, கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட எந்த காரணத்தை கொண்டும் தமிழகம் அனுமதி கொடுக்காது.
சட்டப்படியும் அது முடியாது என்று தமிழ்நாடு நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாகத் தெரிவித்து இருக்கிறார்.
நீதிமன்றத்தால் தீர்க்கப்பட்ட பிரச்சனைகளில் புதிதாக குழப்பம் ஏற்படுத்தும் முயற்சியை கர்நாடகம் செய்து வருகிறது.
தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான, கர்நாடக அரசின் தன்னிச்சையான போக்கை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினும் அமைச் சர் துரைமுருகனும் இன்று ஆலோசனை நடத்தி உள்ளனர்.
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக துணைமுதல்வர் டி,கே.சிவகுமார் மீண்டும் குப்பையை கிளறாமல் சட்டப்படி அணுக வேண்டும். எடுத்தேன், கவிழ்த்தேன் என பேசினால் மோதல் முற்றி இரு மாநில உறவிலும் விரிசல் ஏற்படும் ஆபத்து உள்ளது.
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் போக்கை ஒன்றிய அரசு கண்டித்து அறிவுரை வழங்க வேண்டும்!