மலேசிய நாட்டில் மரம் சார்ந்த தொழிற்சாலைகளுக்கு தேவையான தடி மரங்களின் தேவை அதிகமாக இருப்பதால் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியின் மர வளர்ப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் உயர் மகசூல் தரும் மர இனங்களை அந்நாட்டில் அறிமுகப்படுத்தி தடி மர உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் அந் நாட்டு டிம்பர் கவுன்சிலில் இருந்து 10 பேர் கொண்ட குழுவினர் நேற்று கல்லூரிக்கு வந்திருந்தனர். கல்லூரிக்கு வந்த டிம்பர் கவுன்சில் குழுவினரை முதல்வர் பாலசுப்பிர மணியன், பேராசிரி யர்கள் பார்த்திபன்,சேகர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தொடர்ந்து வனக்கல்லூரியில் செயல் பட்டு வரும் தொழிற்சாலை சார்ந்த வேளாண் காடுகள் கூட்டமைப்பின் செயல்பாடுகள், மதிப்பு கூட்டு தொழில் நுட்பங்கள், துல்லிய பண்ணை முறை மர சாகுபடி, பல்பயன் வேளாண் காடுகள், சிறு கன்றக தொழில்நுட்பம், தொழிற் சாலை சார்ந்த வேளாண் காடுகள், அதிகமாக மகசூல் தரும் குறுகிய கால மர ரகங்கள், ஒப்பந்த முறை சாகுபடி, மரக் காப்பீட்டு திட்டம், இயந்திரமாக்குதல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து மலேசிய குழுவினருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், தரமான நாற் றுக்களை உருவாக்குதல் முதல் மர கொள் முதல் வரை உள்ள சவால்கள் மற்றும் தடைகள் அதற்கான தீர்வுகள் பற்றியும் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கீதாலட்சுமி அறிவுறுத்தலின்படி மலேசிய நாட்டின் மரம் சார்ந்த தொழிற்சாலைகளுக்கும், வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கும் இடையிலான தொழில்நுட்பங்கள் மற்றும் ரகங்களை பரிமாற்றம் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் மேற் கொள்வது தொடர்பாகவும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.