fbpx
Homeதலையங்கம்ஆளுநர் சி.பி.ஆர் - மனதாக வாழ்த்துவோம்!

ஆளுநர் சி.பி.ஆர் – மனதாக வாழ்த்துவோம்!

மகாராஷ்டிரா உட்பட நாட்டின் 12 மாநிலங்கள் மற்றும் லடாக் யூனியன் பிரதேசம் ஆகியவற்றின் ஆளுநர்களை மாற்றி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே தமிழகத்தில் இருந்து பாஜகவின் மாநில தலைவர்களாக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், இல.கணேசன் ஆகியோர் ஆளுநர்களாக உள்ளனர். இந்த நிலையில், தற்போது மூன்றாவதாக சி.பி.ஆர். என்று அன்புடன் அழைக்கப்படும் பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “தமிழகத்திற்கு மீண்டும் ஒரு ஆளுநரை குடியரசு தலைவரும் பிரதமரும் கொடுத்துள்ளனர். இது தமிழினத்தின் மீதும், பாரம்பரியம் மீதும், கலாச்சாரம் மற்றும் தமிழ் மக்கள் மீதும் எத்தகைய அன்பும் பாசமும் வைத்துள்ளார்கள் என்பதற்குச் சான்றாக உள்ளது. இது எனக்குக் கிடைத்த பெருமையாகப் பார்க்கவில்லை. தமிழினத்திற்குக் கிடைத்த பெருமையாகப் பார்க்கிறேன்” என்று தெரிவித்தார்.

ஜார்க்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ஆருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அரசமைப்பு சட்டத்தின்படி தனது கடமைகளை நிறைவேற்றி தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்திட விழைகிறேன், என தனது வாழ்த்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

1957-ம் ஆண்டு மே 4-ம் தேதி பிறந்த சி.பி.ஆர். தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர். அவர் இரண்டு முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அகில இந்திய தென்னை நார் வாரியத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். இப்போது ஆளுநராக உயர்ந்திருக்கிறார்.

இதற்கிடையில் அயோத்தி வழக்கு, பணமதிப்பிழப்பு வழக்கு ஆகியவற்றை விசாரித்த அமர்வுகளில் ஒருவராக இருந்த நீதிபதி அப்துல் நசீர், ஆந்திர பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஆளுநர் நியமனம் என்பது அரசியல் நியமனமாக மாறிவிட்டது என்று விமர்சனம் முன்வைக்கப்பட்டாலும், சி.பி.ஆர் ஆளுநரான நியமிக்கப்பட்டதை தமிழ்நாடு வரவேற்கிறது.

பழுத்த அரசியல்வாதியான அவர், பாஜக தலைவராக இருந்தபோதிலும் அவரது பேச்சும் செயல்பாடுகளும் எந்த சர்ச்சையையும் ஏற்படுத்தியதில்லை. அவர் மீது பெரிதாகக் குற்றச்சாட்டுகள் எதுவும் முன்வைக்கப்பட்டதில்லை.

அரசு சார்ந்த பதவிகளில் இருந்தபோதும் கட்சிப் பதவிகளில் இருந்து வரும் நிலையிலும் விளம்பரமின்றி… எந்த பரபரப்புக்கும் ஆட்படாமல் மக்கள் பணியாற்றியவர்; பணியாற்றி வருபவர்.

இதற்கெல்லாம் கிடைத்த அங்கீகாரம் தான் ஆளுநர் என்ற மணிமகுடம். எளிமையான வாழ்க்கையை தனதாக்கிக் கொண்ட சி.பி.ஆர். ஆளுநராகி இருப்பது அவர் சொன்னது போலவே, தமிழகத்திற்கே பெருமை தான்.

சி.பி.ஆர். ஆளுநர் பணி சிறக்க வாழ்த்துவோம்!

படிக்க வேண்டும்

spot_img