fbpx
Homeதலையங்கம்மகாராஷ்டிராவில் மீண்டும் விரைவில் ஆட்சி மாற்றம்?

மகாராஷ்டிராவில் மீண்டும் விரைவில் ஆட்சி மாற்றம்?

மகாராஷ்டிரா மாநில ஆட்சி அதிகாரம் மியூசிகல் சேர் மாதிரி மாறுதலுக்கு உள்ளாகி வருகிறது. சிவசேனாவை உடைத்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதல்வரானார் ஏக்நாத் ஷிண்டே. பாஜக சார்பில் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக இருக்கிறார்.

இந்த ஆட்சியின் ஆட்டமும் அடங்கப்படுகிறது என்ற பேச்சு அடிபடுகிறது. அடுத்தது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருக்கும் அஜித் பவார் முதல்வராக வாய்ப்பு இருக்கிறது என்று முணு முணுக்கப்படுகிறது.

இதற்கு வலு சேர்க்கும் வகையில் இன்று நடக்கவிருந்த பேரணியை அஜித் பவார் ரத்து செய்து இருக்கிறார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த இரண்டு பாஜக தலைவர்கள் டெல்லிக்கு விரைந்து இருப்பதாகவும், ஆட்சி மாற்றம் விரைவில் இருக்கலாம் என்றும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

உச்ச நீதிமன்றம் எந்த நேரத்திலும் கட்சி தாவல் சட்டத்தின் கீழ் ஏக்நாத் ஷிண்டே மீதான தீர்ப்பை வழங்கலாம். ஆதலால், இந்த நேரத்தில் தனது நீண்ட நாள் கனவான முதல்வர் ஆசையை தீர்த்துக் கொள்ள அஜித் பவார் தயாராகி விட்டார். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அவருக்கு 35-40 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதால், கட்சித் தாவல் தடை சட்டம் தடையாக இருக்காது என்று கூறப்படுகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டில் இதேபோல் பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைக்க அஜித் பவார் தயாரானார். ஆனால், கட்சியின் தலைவர் சரத்பவாரின் ஆதரவு இல்லாததால் அவரால் முதல்வர் பதவி கனவை நிறைவேற்ற முடியவில்லை.

கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி டெல்லி சென்று ரகசியமாக அமித் ஷாவை அஜித் பவார் சந்தித்தாக செய்திகள் வெளியானது. அங்கு இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் முடித்துவிட்டு அப்போதே யார் யாருக்கு எந்த அமைச்சர் பொறுப்பு என்று இறுதி செய்யப்பட்டதாகவும் கிசு கிசுக்கப்படுகிறது. ஆக, வெளிப்படையாகவே ஏக்நாத் ஷிண்டேவை பாஜக ஒதுக்கி வருகிறது என்பது தெளிவாகிறது.

இதையெல்லாம் கருதி மராத்தி என்ற அடையாளத்தைக் கொண்ட அஜித் பவாரின் தலைமையில் ஆட்சி நடத்த வேண்டும் என்பது பாஜகவின் கணக்காக இருக்கிறது. அதுவும், அதிக வாக்கு சதவீதத்தைக் கொண்ட அஜித் பவார் ஆட்சி அமைத்தால் மராத்தி மக்களின் அன்பை பெறலாம் என்பது பாஜகவின் இன்னொரு கணக்கு.
இதையெல்லாம் கூட்டிக்கழித்துப் பார்த்தால் மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் விரைவில் நடக்கும், ஆனால் அது எப்போது என்பதே கேள்வி!

படிக்க வேண்டும்

spot_img