Homeபிற செய்திகள்சாத்தான்குளம் கொடூரத்தை நினைவுபடுத்தும் மடப்புரம்!

சாத்தான்குளம் கொடூரத்தை நினைவுபடுத்தும் மடப்புரம்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். அவரது மகன் பென்னிக்ஸ். செல்போன் கடை நடத்தி வந்த இருவரையும் கடந்த 2020 ஜூன் 19-ம் தேதி சிறிய வாக்குவாத பிரச்சினைக்காக போலீஸார் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இருவரையும் காவல் நிலையத்திலேயே போலீஸார் கொடூரமாகத் தாக்கினர். 2 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியடையச் செய்ததை யாரும் மறந்திருக்க முடியாது.

தற்போது அந்த சம்பவத்தை நினைவுப்படுத்தும் வகையில் மற்றொரு சம்பவம் சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் அரங்கேறி இருக்கிறது. சாத்தான்குளத்தில் நடந்தது அதிபயங்கரம் என்றால் மடப்புரத்தில் நடந்திருப்பதை பயங்கரம் என்று சொல்லலாம். கோவில் காவலாளி அஜித்குமாரை போலீசார் அடித்தே கொன்றிருக்கிறார்கள். அதற்கான வீடியோ முக்கிய ஆதாரமாக வெளியாகி அதனை உறுதிப்படுத்தி இருக்கிறது.

இச்சம்பவத்தை கடுமையாக கண்டித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை, மாவட்ட நீதிபதி விசாரித்து வரும் 8 ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில் தமிழ்நாடு அரசும் உடனடியாக தொடர் நடவடிக்கை எடுத்துள்ளது.

5 காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். உதவி சூப்பிரெண்டு சண்முக சுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

முதலில் சிபி சிஐடிக்கு மாற்றப்பட்ட விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது உத்தரவிட்டுள்ளார். மேலும் காவலாளியின் தாய் மாலதி, தம்பி நவீன்குமார் ஆகியோருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாகப் பேசி வருத்தம் தெரிவித்து ஆறுதல் கூறி இருக்கிறார்.

நடக்கக்கூடாதது நடந்து விட்டது. சம்பந்தப்பட்டவர்கள் மீது ஆக்ஷன் எடுத்திருக்கோம். நீங்க தைரியமாக இருங்க. உங்களுக்கு வேணுங்கிறதை செய்து தருகிறோம் என்றும் அவர் உறுதியளித்தார்.

சாத்தான்குளம் வழக்கில் போலீசார் பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்குமாறு 2021 மார்ச் மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இன்னும் வழக்கு விசாரணை முடியவில்லை.

அதேபோல மடப்புரம் வழக்கும் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. சாத்தான்குளம் வழக்கைபோல் தாமதப்படுத்தாமல், அஜித்குமார் கொலை வழக்கில் விரைந்து நீதி கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கிய வழக்குகளில் தாமதமாக கிடைக்கும் நீதி, மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் கடந்து போய்விடும்.

காவலாளி அஜித்குமார் கொலை வழக்கை கையிலெடுக்கப் போகும் சிபிஐ, கிடப்பில் கிடக்கும் சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கையும் துரிதப்படுத்தி தண்டனை பெற்றுத்தரும் நடவடிக்கையில் தீவிரம் காட்ட வேண்டும் என்ற நம்பிக்கையோடு தற்போது வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் ஐந்தே மாதங்களில் விசாரணை முடித்து குற்றவாளி ஞானசேகரனுக்குத் கடும் தண்டனை வாங்கிக் கொடுக்க முடிந்ததே. அது எப்படி சாத்தியமானது?

ஒவ்வொரு முக்கிய வழக்கிலும் நீதிமன்றம் இடித்துரைப்பதற்காக காத்திராமல் விசாரணை தீவிரப்படுத்தப்பட வேண்டும். சாத்தான்குளம் வழக்கில் மக்களின் நம்பிக்கையை இழந்து நிற்கும் சிபிஐ, அஜித்குமார் கொலை வழக்கில் மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் விசாரணையை முன்னெடுக்க வேண்டும்.

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் ஒருபுறமிருந்தாலும் இதுபோன்ற லாக்&அப் மரணங்கள் இனி ஒருபோதும் நடைபெறாத வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக எழுந்துள்ளது!

படிக்க வேண்டும்

spot_img