fbpx
Homeதலையங்கம்வள்ளுவருக்கு மதச்சாயம்: திசைதிருப்புகிறாரா ஆளுநர்?

வள்ளுவருக்கு மதச்சாயம்: திசைதிருப்புகிறாரா ஆளுநர்?

தமிழாசான் திருவள்ளுவருக்கு காவி ஆடை அணிவிப்பதன் மூலம் மத ரீதியான சர்ச்சைகளை அரங்கேற்றும் செயல்களில் பாஜகவினரும் அரசமைப்பில் உயர் பதவியில் இருப்போரும் ஈடுபடுவது வேதனை தருவதாக உள்ளது. திருவள்ளுவருக்கு சாதி, மத அடையாளங்களை பூசும் வகையில் தமிழக பா.ஜ.க-வின் சமூக வலைதள பக்கத்தில் முன்னர் ஒரு புகைப்படம் பதிவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, திரு வள்ளுவர் சிலைக்கு காவி அடையாளம் பூசி ஆர்ப் பரித்தனர்.

அதன் உச்சகட்டமாக தற்போது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி காவி உடை அணிந்த திருவள்ளுவரின் படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் திருவள்ளுவரை “சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவி” என்ரு குறிப்பிட்டிருந்தார். வள்ளுவருக்கு மதச்சாயம் பூச முனைந்திருக்கிறார்.

ஆளுநரின் இந்தப்பதிவு வெறும் சர்ச்சையை மட்டும் கிளப்பவில்லை, தமிழர்களின் நெஞ்சங்களில் வேலால் குத்திப் பார்த்திருக்கிறார்.
இதற்கு தமிழக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், தமிழ்நாட் டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என்று கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.

உலகப்பொதுமறை என்று உலகின் எல்லா நாடுகளிலும் போற்றப்படும் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரை சனாதனம் என்ற குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட வைக்கப் பார்க்கிறாரே, ஆளுநர்? இதனை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது.
குறள்நெறி என்ற தனிவழியைக் காட்டி மக்களை வழிநடத்தும் அய்யன் வள்ளுவரின் வரலாறே தெரியாமல், ஆளுநராக வந்ததாலேயே தான் சொல்வதெல்லாம் வேதம் என்று நினைத்து எதையும் சொல்லக்கூடாது.

ஒரு ஆளுநர் இப்படி யெல்லாம் பேசுவது அழகல்ல. அவர் முதலில் திருக்குறள் நூல் முழுவதையும் படித்துத் தெளிய வேண்டும்.
அப்போது தான் திருக்குறள் பற்றியும் வள்ளுவர் பற்றியும் தனக்கு அரிச்சுவடி கூட இதுவரை தெரிந்திருக்கவில்லை என்பதே அவருக்கே புலப்படும். எதற்கெல்லாமோ குழு அமைக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, இதற்கும் தமிழாய்ந்த அறிஞர்கள் குழுவை அமைத்து தெளிவு பெறலாம்.

அதற்குக் காலதாமதமாகும் என்றால் அய்யன் திருவள்ளுவர் பற்றி பேசுவதை விடுத்து அரசியல் சட்டப்படி நடக்க முயற்சி செய்ய வேண்டும்.
மோடி & சங்கராசாரியார்கள் இடையேயான சனாதனம்- சர்ச்சையை திசை திருப்ப ஆளுநர் இப்படிச் செய்கிறாரோ என்ற சந்தேகக் கேள்வியை எழுப்பி இருக்கிறார், அமைச்சர் மனோ தங்கராஜ். சனாதன தர்ம சாஸ்திரங்களின்படி ராமர் சிலையை பிரதமர் மோடி தொடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறிய சங்கராச்சாரியர் களுக்கு தனது பதிலை முதலில் கூறட்டும் என்ற அமைச்சரின் சவாலை ஏற்று ஆளுநர் ஆர்.என்.ரவி பதில் அளிப்பாரா?

படிக்க வேண்டும்

spot_img