fbpx
Homeதலையங்கம்கேள்வி கேட்ட எம்பிக்கள் சஸ்பெண்டு ரத்து ஆகுமா?

கேள்வி கேட்ட எம்பிக்கள் சஸ்பெண்டு ரத்து ஆகுமா?

மக்களவை, மாநிலங்களவை கூட்டத்தொடர் டிசம்பர் 13ல் நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில், பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து 2 மர்ம நபர்கள் அரங்கிற்குள் சட்டென்று குதித்து நாடாளுமன்ற பாதுகாப்பையே கேள்விக்குறி ஆக்கினர். இது தொடர்பாக மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

விசாரிக்கையில், அவர்களுக்கு கர்நாடக பாஜக எம்.பி தான் விசிட்டர் பாஸ் பரிந்துரை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ளது.

அது மட்டுமின்றி, இதுகுறித்து விவாதம் செய்யவும், உள்துறை அமித்ஷா பதவி விலகவும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர். மக்கள் பிரதிநிதிகளான எம்.பிக்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்ததோடு நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விவாதம் நடத்தக் கோரினர். மறுக்கப்பட்டதால் அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று அமளியில் ஈடுபட்டனர்.

அமளியில் ஈடுபட்டதாக எம்.பிக்களை அடுத்தடுத்து சபாநாயகர் ஓம்பிர்லா சஸ்பெண்டு செய்ய ஆரம்பித்தார். முதலில் டி.என்.பிரதாபன், டீன் குரியகோஸ், எஸ்.ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ் மற்றும் ஹைபி ஈடன் ஆகிய 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

தொடர்ந்து வி.கே.ஸ்ரீகண்டன், பென்னி பெஹனன், முகமது ஜாவேத், பி.ஆர். நடராஜன், கனிமொழி, கே.சுப்பராயன், எஸ்.ஆர்.பார்த்திபன் (அவர் அவையிலேயே இல்லை அவரையும் சஸ்பெண்டு செய்தனர்), எஸ் வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் ஆகிய 9 மக்களவை எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மாநிலங்களவையில் உறுப்பினர் டெரெக் ஓ பிரையன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இவர்களில், 9 பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள். 2 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள். ஒருவர் சி.பி.ஐ கட்சியை சேர்ந்தவர். இரண்டு பேர் திமுகவை சேர்ந்தவர்கள் ஆவார்.

இதன்மூலம், மொத்தம் 15 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தற்போது மேலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக கைது செய்யப்பட்டவர்கள் பாஜக எம்.பியின் ஒத்துழைப்போடு உள்ளே வந்ததற்கு, பாஜக எம்.பியிடம் விசாரணை மேற்கொள்ளவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவம் அசாதாரணமானது. அது பற்றி விவாதிக்க வேண்டியது அவசியம் தானே? பிரதமர் மோடியோ, அமித்ஷாவோ அவையில் எதிர்க்கட்சிகளுக்கு பதில் அளித்திருக்க வேண்டும். மணிப்பூர் வன்முறை சம்பவத்தின்போதும் நாடாளுமன்றத்தில் இப்படியான அசாதாரண நிலையே உருவானது.

பிரச்னை குறித்து விவாதித்திருந்தால் அல்லது பிரதமர் மோடியோ அமித்ஷாவோ நேற்றாவது விளக்கம் அளித்திருந்தால் நாடாளுமன்றம் முடங்காமல் ஆரோக்கியமான விவாதங்கள் தொடர்ந்து நடந்திருக்குமே.

இந்த விஷயத்தில் சஸ்பெண்ட் நடவடிக்கை, ஜனநாயக விரோத செயல் என்றே மக்கள் பலரும் கருதுகின்றனர், கருத்து தெரிவித்தும் வருகின்றனர். 15 எம்பிக்களின் சஸ்பெண்டு நடவடிக்கையை சபாநாயகர் ஓம்பிர்லா ரத்து செய்ய வேண்டும் என பிரதான கட்சிகளின் தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாடாளுமன்ற பாதுகாப்பு கேள்விக்குறியானது குறித்து கேள்வி கேட்டதற்கே சஸ்பெண்டா? பிரச்னையை திசைதிருப்பும் முயற்சியே இது என்ற விமர்சனமும் எழுகிறது.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 15 எம்பிக்களின் சஸ்பெண்டு உத்தரவை உடனடியாக சபாநாயகர் ஓம்பிர்லா ரத்து செய்ய வேண்டும், நாடாளுமன்ற ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு!

படிக்க வேண்டும்

spot_img