fbpx
Homeதலையங்கம்பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான கொடூர குற்றம்!

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான கொடூர குற்றம்!

தமிழகத்தில் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கோவில்கள் என பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும் இடங்களில் பிச்சை எடுக்க வைத்து பணம் சம்பாதிக்கும் தாதா கும்பல்கள் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

தினமும் ஆயிரக்கணக்கில் வசூலாவதால் சில கும்பல்கள் இதை தொழில் போல செய்து வருகின்றனர். தொலை தூரங்களில் இருந்து பெருநகரங்களுக்கு ஏழைப்பெண்களையும் குழந்தைகளையும் அழைத்து வந்து பிச்சை எடுக்க வைக்கின்றனர். வசூலாகும் பணத்தில் சில நூறுகளை மட்டும் அவர்களுக்கு வழங்கி விட்டு பெரும் தொகையை தாதாக்களே அபகரித்துக் கொள்கின்றனர்.

இந்த தகவல் பொதுமக்கள், சமூக ஆர்வலர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கிறது. இந்த நிலையில், பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடும் கும்பலை ஒழிக்க ஆபரேஷன் மறுவாழ்வு என்ற பெயரில் தமிழக காவல்துறை நடவடிக்கை எடுத்து பலரையும் மீட்டுள்ளது.

16 குழந்தைகள் உள்பட 742 பேரை ஒரேநாளில் காவல்துறை மீட்டதோடு, பலரை குடும்பத்தினரோடு சேர்த்து வைத்துள்ளது. பலரை காப்பகங்களில் பத்திரமாக ஒப்படைத்து இருக்கிறார்கள்.

உண்மையிலேயே உழைக்கும் திறனற்றவர்கள், சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட முதியவர்கள், மூதாட்டிகள், மாற்றுத்திறனாளிகள், மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு இரந்து உண்ணும் நிலை என்றால் அவர்களை பொதுமக்கள் ஆதரிக்காமல் இருக்க மாட்டார்கள்.

தாழக் கிடப்பாரை தற்காப்பது தானே தர்மம்? அந்த தர்மம் ஆதிகாலம் தொட்டு நடந்து கொண்டு தானிருக்கிறது. ஆனால் பிச்சை எடுப்பதை ஒரு தொழிலாக நடத்தும் கும்பல்கள் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும். அதிலும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் இந்த கொடூர குற்றம், நாட்டுக்கே அவமானத்தைத் தேடித் தருவதாக உள்ளது.

இந்த தொழிலில் ஈடுபடும் கும்பலை தேடும் பணியில் காவல்துறையினர் முடுக்கி விடப்பட்டுள்ளனர். ஏழைப்பெண்கள் மற்றும் குழந்தைகளை இத்தகைய தொழிலில் ஈடுபடுத்தும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார், டிஜிபி சைலேந்திரபாபு.

தொலை தூரங்களில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளை அழைத்து வந்து பிச்சை எடுக்க வைக்கும் நபர்கள் குறித்து தகவல் அறிந்தால் 044-28447701 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பெண்களையும் குழந்தைகளையும் பிச்சையெடுக்க வைக்கும் கும்பலை வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்க களமிறங்கி இருக்கும் தமிழக போலீசாருக்கும் டிஜிபி சைலேந்திரபாபுவுக்கும் பாராட்டுகள்.

தொய்வில்லா தொடர் நடவடிக்கைகள் மூலமே இதில் வெற்றி பெற முடியும் என்பதை காவல்துறை மறந்து விடக்கூடாது. பொது நலன் கருதி, காவல்துறையோடு நாமும் கைகோர்த்து செயலில் இறங்குவோம்.

தெரிந்த தகவல்களை காவல்துறைக்கு பகிருவோம். சமுதாயப் பணியில் கொஞ்சமேனும் பங்கேற்போம், வாருங்கள் மக்களே!

படிக்க வேண்டும்

spot_img