fbpx
Homeபிற செய்திகள்திருவில்லிபுத்தூர், திருச்சுழியில் புதிய அரசு கல்லூரிகளுக்கு ரூ.23.79 கோடியில் கட்டிடங்கள் கட்ட அடிக்கல்

திருவில்லிபுத்தூர், திருச்சுழியில் புதிய அரசு கல்லூரிகளுக்கு ரூ.23.79 கோடியில் கட்டிடங்கள் கட்ட அடிக்கல்

விருதுநகர் மாவட்டத்தில் திருவில்லிபுத்தூர், திருச்சுழியில் புதிய கலை அறிவியல் கல்லூரிகளுக்கு மொத்தம் ரூ.23.79 கோடி மதிப்பில் நிரந்தர கட்டிடங்கள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டன.

முதல்வர் தலைமையிலான சமத்துவ நோக்குடைய தமிழக அரசு, உயர்கல்வித் துறையினை மக்கள் நலனுக்கான ஓர் அமைப்பாகக் கருதி செறிவுமிக்க செயல்திட்டங்களால் சமூகத்தின் பல்வேறு படிநிலைகளிலும் உயர்கல்வியின் விழுமியங்கள் அனைத்து பரிமாணங்களிலும் சென்றடைவதை உறுதி செய்கிறது.

மாணாக்கர் சேர்க்கை, கற்றல்- கற்பித்தல், திறன் மேம்பாடு, அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிகள், பயிற்சிகள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் ஆகியவைகளை விரிவாக்கத்துடன் மேம்படுத்தத் தேவையான நிதி மற்றும் வளங்களைத் தொடர்ந்து அளித்து வருகிறது.

இத்திட்டங்களின் செயல்பாட்டுத் திறனையும், எதிர்பார்க்கப்படும் வளர்ச்சிகளையும் மேம்பட்ட செயல் வடிவ வழிமுறைகள் மூலம் உறுதி செய்து வருகிறது.
கல்வி நிலையில் குறிப்பாக உயர்கல்வி, மக்களின் வாழ்வியல் திறன்களை வலுப்படுத்தும் வளமுடையது.

அன்றாட வாழ்க்கையை வாழ்வதற்கு உயர்கல்வி உறுதுணையாக இருப்பதோடு அன்றி, வாழ்க்கையில் உயர்நிலையை எட்டுவதற்குரிய அடித்தளமாகவும் அமைகிறது. உயர்கல்வி, மனிதவள மேம்பாட்டுக்கான நவீன இலட்சியக் குறியீடுகளை நோக்கமாகக் கொண்டு, நாட்டை மேம்படுத்துவதற்கான அடிப்படை அணுகுமுறையைக் கொண்டுள்ளது.

தமிழக அரசு உயர்கல்வித்துறையின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதே முக்கியமான நோக்கமாக கொண்டுசெயல்படுகிறது. உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்கும் நிலையில், கிராமப்புற மாணவர்களுக்கும், பின்தங்கிய மற்றும் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் உயர்கல்வியின் வாயில்களையும் வாய்ப்புகளையும் திறந்து வைக்கிறது.

தமிழக இளைஞர்கள் தங்களுடைய தனித் திறமைகளையும், செயல் திறன்களையும், கண்டறிந்து வளர்த்துக் கொள்ளவும், அவற்றை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை எய்தும் உன்னத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் திருவில்லிபுத்தூர் மற்றும் திருச்சுழி ஆகிய தற்காலிகமான இடங்களில் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டும் வகையில், திருவில்லிபுத்தூர் பிள்ளையார்குளம் கிராமத்தில் ரூபாய் 11.33 கோடி மதிப்பிலும், திருச்சுழியில் ரூபாய் 12.46 கோடி மதிப்பிலும் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடம் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன.

திருவில்லிபுத்தூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2020-ம் ஆண்டு தற்காலிக இடத்தில் தொடங்கப்பட்டு, பி.காம், பி.ஏ தமிழ், ஆங்கிலம், பி.எஸ்.சி கணிதம், கணினி உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் சுமார் 850 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

திருச்சுழி புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி 07.07.2022 அன்று தொடங்கி வைக்கப்பட்டு, 2022-23- கல்வியாண்டில் இளங்கலை (தமிழ்) இளங்கலை (ஆங்கிலம்) இளமறிவியல் (வேதியியல்) இளநிலை (வணிகவியல்) மற்றும் இளமறிவியல் (கணினி அறிவியல்) ஆகிய 5 பாடப்பிரிவுகளில் சுமார் 195 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தரைத்தளம், முதல்தளம், இரண்டாம் தளம் என மூன்று தளங்களுடன் அமைய உள்ளது.

தரைத்தளத்தில் நிர்வாக அலுவலகம், மூன்று வகுப்பறைகள், நூலகம், நூலக அலுவலக அறை, இரண்டு ஆசிரியர்கள் அறை, இரண்டு துறைத்தலைவர்கள் அறை மற்றும் மாணவ, மாணவியர்களுக்கான கழிவறைகள் என 1551 ச.மீ பரப்பளவிலும், முதல் தளம் 6 வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள், ஒரு கருத்தரங்கம், 2 துறை தலைவர்கள் அறை மற்றும் மாணவ, மாணவியர்களுக்கான கழிவறை வசதிகள் என 1529 ச.மீ. பரப்பளவிலும், இரண்டாம் தளம் 6 வகுப்பறைகள், உடற்கல்வி ஆசிரியர் அறை, ஓர் ஆசிரியர் அறை, மாணவ, மாணவியர்களுக்கான கழிவறை வசதிகள் என 977 ச.மீ. என மொத்தம் 4057 ச.மீ பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த புதிய கலை மற்றும் அரசு கல்லூரிகள் அமைவதால், உயர்கல்விக்கு செல்லும் இப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த ஏழை எளிய மாணவ, மாணவியர்கள் பயன்பெறுவார்கள்.

“நீண்ட நாள் கனவு நனவானது”

திருச்சுழி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்று வரும் ஜெயந்தி, சரஸ்வதி, மகரஜோதி ஆகியோர் கூறியதாவது:
நாங்கள் இப்பகுதியிலுள்ள பல்வேறு கிராமப்பகுதிகளில் இருந்து கல்லூரியில் பயின்று வருகிறோம். இந்த பகுதியில் கல்லூரி அமைய வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை தற்போது நிறைவேறி உள்ளது.

எங்களை போன்ற வசதியில்லாத குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த கல்லூரி ஒரு வரமாக கிடைத்துள்ளது. பெண்கள் அதிக தூரம் சென்று படித்து வர பெற்றோர்களால் பயப்பட்டு, உயர்கல்வியை தொடர முடியாத பெண்களுக்கு இந்த கல்லூரி அமைத்தது ஒரு வரப்பிரசாதம்.

முதல்வர் அறிமுகப்படுத்திய இந்த புதுமை பெண் திட்டம், எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எங்களை போன்ற வசதி இல்லாத குடும்ப பின்னணியில் இருந்து படித்துக் கொண்டிருக்கும் மாணவிகளுக்கு, இந்த திட்டம் மூலம் மாதந்தோறும் கிடைக்கும் ரூபாய் 1000 ஊக்கத்தொகையை கொண்டு, படிப்பிற்கு தேவையான செலவுகளை செய்ய முடியும்.

ஏழை எளிய மாணவர்கள், குறிப்பாக பெண்கள் உயர்கல்வி பயிலுவதற்கு இது போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்வருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் என்றனர்.

தொகுப்பு:
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
விருதுநகர் மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img