இந்தியாவின் அனைத்து தேசிய திட்டங்களுக்கும், சுகாதார மையங்களுக்கும், இந்தியில் பெயர்மாற்றம் செய்து வருகிறது பாஜக அரசு. தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்கள் எத்தனை முறை சொன்னாலும் தன்னுடைய போக்கை சற்றும் மாற்றாமல் தொடர்கிறது ஒன்றிய பாஜக அரசு.
லடாக், இமயமலைப் பகுதியில் இருக்கும் ஒன்றியப் பகுதி ஆகும். பல பழங்குடி சமூகங்களை சேர்ந்தவர்கள் வசிக்கும் பகுதி இது. மலைப் பாலைவனம் என அழைக்கப்படும் லடாக் பகுதியில் அதிகப்படியாக லடாக்கி, திபெத்தியன் மொழிகளே புழக்கத்தில் உள்ளன.
லடாக்கின் சுகாதார மையங்களுக்கு சமீபத்தில், ஒன்றிய பாஜக அரசு இந்தியில் பெயர்மாற்றம் செய்திருப்பது, அம்மக்களிடையே பரவலான எதிர்ப்பை உருவாக்கியிருக்கிறது.
புத்தமத குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரிவுகள், பெயர்மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. வேறு வழியின்றி, தற்போது பெயர்மாற்றத்தை திரும்பப்பெற முன்வந்துள்ளது பாஜக அரசு.
இந்திக்கு எதிரான போக்கு கொண்ட மாநிலங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பது தேவையில்லாத பிரச்னைகளைத் தான் உருவாக்கும். பிற மொழிகளை உதாசீனப்படுத்துவ¬தை ஒருபோதும் மக்கள் ஏற்க மாட்டார்கள். இந்த மூக்குடைப்பு தேவையா?
சமீபத்தில் கூட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “குற்றவியல் சட்டங்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டிருந்தாலும், நான் IPC என்றுதான் கூறுவேன். காரணம், எனக்கு இந்தி தெரியாது. தெரியாத மொழியில் வழக்காட விரும்பவில்லை,” என தெரிவித்திருந்தார்.
IPC, CrPC, IEA ஆகிய குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக சுரக்ஷ சன்ஹிதா, பாரதிய சாக்ஷ்யா என பெயர்களை கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பாஜக மாற்றியது குறிப்பிடத்தக்கது.
இவை அல்லாமல், ஒன்றிய அமைச்சகங்களுக்கும், ஆயுஷ் (உள்நாட்டு மருத்துவம், ஓகம்), ஜல் சக்தி (நீர் வளம்), பஞ்சாயத்தி ராஜ் (ஊராட்சி) என பெயரிட்டுள்ளது ஒன்றிய பாஜக. இந்நிலை, கல்வியிலும் தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் தொடர்கிறது.
யுபிஎஸ்சி போன்ற இந்தியப் பணிக்கான தேர்வு முறைகளில், முன்பு இருந்த தமிழ் தற்போது நீக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி மொழியில் மட்டுமே கேள்வித்தாள்கள் உருவாக்கப்படுகின்றன. வரும் காலத்தில், ஆங்கிலமும் நீக்கப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.
இந்தியை யார் வேண்டுமானாலும் படிக்கலாம்; படிக்கட்டும். திணிக்க வேண்டாம் என்பது தான் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நிலை. வடக்கிலும் இந்நிலை இருக்கிறது என்பதைத் தான் லடாக் மக்கள் எதிரொலித்து இருக்கிறார்கள்.
இந்தியர்களுக்கு தேசப்பற்று எந்த அளவிற்கு உள்ளதோ அந்த அளவிற்கு தாங்கள் பேசும் மொழி மீதும் பற்று வைத்திருக்கிறார்கள் என்பதை மறக்காமல் வழக்கத்தில் உள்ள எல்லா மொழிகளும் வளர ஒன்றிய அரசு வாய்ப்பு தரவேண்டும்.
அது தான் மொழிவாரி மாநில மக்களுக்குத் தரும் மரியாதையாக இருக்கும்!



