மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை நகராட்சிக்கு உட்பட்ட எத்தப்பன் நகர் என்னும் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் விவசாய விளை நிலங்கள் உள்ளது.
இப்பகுதியில் உள்ள இயற்கை வளம் மிக்க கரியமலை என்ற மலையில் தனியார் ஒருவர் கல்குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு விண்ணப்பம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
கரிய மலையில் கல்குவாரி அமைக்க அனுமதியளிப்பது தொடர்பாக மக்கள் கருத்து கூட்டம் நடைபெற்ற போது இதற்கு இப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இங்கு புதிய கல்குவாரி அமைக்க ப்பட்டு பாறைகளை உடைக்க வெடிகள் பயன்படுத்தும் போது இம்மலையை சுற்றிலும் உள்ள எத்தப்பன் நகர், கோடதாசனூர், அம்பேத்கார் நகர், ராம் நகர், டி.ஆர்.எஸ் நகர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள குடியிருப்பு வீடுகள் சேதமாவதோடு நிலத்தடி நீரோட்டம் பாதிக்கப்பட்டு இப்பகுதியில் விவசாயமே செய்ய இயலாத நிலை ஏற்படும் என இப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
வன விலங்குகள் ஊருக்குள் நுழையும் ஆபத்தான நிலை உரு வாகும் என்றும் அச்சம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கரிய மலை பகுதியில் புதிய கல்குவாரி அமைக்க அரசு சார்பில் இதுவரை அனுமதி அளிக்கப்படாத நிலையில் அங்கு கிராவல் மண் அள்ள கனிம வளத் துறை அனுமதி அளித்துள்ளதாக தெரிகிறது.
இதனால் மலையின் உச்சியில் இருந்து இரு டிப்பர் லாரிகளில் கிராவல் மண் அள்ளப்பட்டு கொண்டு வரப்பட்ட போது அதனை தடுத்து உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து கனிம வளத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இயற்கை வளம் மிக்க கரிய மலையின் கனிம வளங்களை சுறண்டவோ சுற்றுச்சூழலை பாழடிக்கும் எந்தவொரு புதிய திட்டத்தையும் அனுமதிக்க மாட் டோம், இது தொடர்பாக தொடர் போராட்டங்கள் நடத்துவோம் என ஊர் கூட்டம் போட்டு தீர்மானம் நிறைவேற்றினர்.
இந்நிலையில், நேற்று மாலை கோவை மாவட்ட கனிம வளத்துறை அதிகாரிகள் கரியமலைக்கு நேரில் வந்த ஆய்வு நடத்தினர். மாவட்ட கனிம வளத்துறையின் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் சசிகுமார் தலை மையில் வந்திருந்த அதிகாரிகள் குழுவினரோடு கரியமலையின் மேல் பகுதிக்கு சென்றபோது அவர்களிடம் அப்பகுதி மக்கள் அங்கு நடைபெற்று வரும் அத்துமீறல்களையும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.
இதனையடுத்து கிராவல் மண் அள்ளப்பட்ட மலை பகுதியை ஆய்வு செய்த அதிகாரிகள் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களிடம் உறுதியளித்து சென்றனர்.