உலக விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் 2024 போட்டிகள் கடந்த 26ஆம் தேதி வண்ணமயமான கொண்டாட்டத்துடன் பாரிஸில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் 24 வயதான எகிப்திய ஃபென்சர் நடா ஹபீஸ் என்ற வீராங்கனை ஏழு மாத கர்ப்பிணியாக போட்டியிட்டதை வெளிப்படுத்தி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
பெண்களுக்கான தனிநபர் சபேரின் முதல் சுற்றில் நடா ஹபீஸ் 15-13 என்ற கணக்கில் அமெரிக்க வீராங்கனையான எலிசபெத் டார்டாகோவ்ஸ்கியை வீழ்த்தினார். 16-வது சுற்றில் தென் கொரிய வீரர் ஜியோன் ஹயோங்கிடம் 15-7 என்ற கணக்கில் வீழ்ந்தார்.
இதுகுறித்து நடா ஹபீஸ் தனது சமூக வலைதள பக்கத்தில், ‘போட்டியில் இரண்டு வீரர்கள் இருப்பதாக பார்ப்பவர்களுக்கு தோன்றும், ஆனால் அங்கு மூன்று பேர் உள்ளனர்! நான், எனது சக போட்டியாளர் மற்றும் இந்த உலகிற்கு விரைவில் வர இருக்கும் என் குழந்தை!’ என பதிவிட்டிருந்தார்.
‘எனது குழந்தைக்கும் எனக்கும் உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் சவால்களில் பங்கு இருந்தன. வாழ்க்கை மற்றும் விளையாட்டுகளின் சமநிலையை பராமரிக்க போராடுவது கடினமானது. இருப்பினும் அது மதிப்புக்குரியது’ என்றும் அவர் தனது உணர்வை வெளிப்படுத்தி இருந்தார்.
நடா ஹபீஸின் இந்த உத்வேகமூட்டும் பதிவிற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை உற்சாகத்துடன் தெரிவித்து வருகின்றனர்.
எந்த சூழ்நிலையாக இருந்தாலும் பெண்களால் முடியாதது எதுவும் இல்லை என்பதை நடா ஹபீஸ் நிரூபித்து, பெண்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
வாழ்த்துகள்!