fbpx
Homeதலையங்கம்தடையை நீக்குமா மருத்துவக் கவுன்சில்?

தடையை நீக்குமா மருத்துவக் கவுன்சில்?

மருத்துவத் துறையிலும் மருத்துவக் கல்வியிலும் தமிழ்நாட்டுக்கு எப்போதும் ஓர் சிறப்பான இடம் உண்டு. இங்குள்ள மருத்துவக் கல்லூரிகளில் பயின்றோரில் பலர் அத்துறையில் நிபுணத்துவம் பெற்றுத் திகழ்கின்றனர். நல்ல பெயரும் புகழும் பெற்று வெளிநாடுகளிலும் உயர்நிலையில் உள்ளனர்.

இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள மூன்று மருத்துவ கல்லூரிகளுக்கு
இந்தாண்டு, மாணவர்கள் சேர்க்கையை நிறுத்தி வைக்கும் ஆணையை இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வுக் குழு பிறப்பித்து இருப்பது அதிர்ச்சி தருகிறது.

சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி அரசினர் கி.ஆ.பெ.விஸ்வநாதன் மருத்துவக் கல்லூரி, புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் சில நிர்வாக குறைபாடுகளைச் சுட்டிக் காட்டி அவசர அவசரமாக இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுக் குழுவினர் கண்டறிந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்யாமல் இந்தளவுக்கு நிலைமை சீரியஸாகப் போனதற்கு யார் காரணம்? அந்தந்த மருத்துவக் கல்லூரி முதல்வர்களும் பேராசிரியர்களும் கூட காரணமாக இருக்கக் கூடும்.

ஆனால், இப்பிரச்னையால் வெகுவாகப் பாதிக்கப்படுகிறவர்கள் இவ்வாண்டு வந்து சேர்ந்து படிக்க வேண்டிய மாணவர்கள் தான். இப்படி ஒரு இடக்குறைப்பு மூலம் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது எவ்வகையிலும் சரியானதல்ல; தர்மமும் அல்ல.

ஏதேனும் குறைபாடுகளை கண்டறிந்தால் அதனைச் சுட்டிக்காட்டி அவற்றை நிவர்த்தி செய்ய கால அவகாசம் தந்து சரி செய்து அனுமதியை தொடர்ந்து வழங்கி
இருக்க வேண்டும்? அதனை ஏன் மருத்துவக் கவுன்சில் செய்யவில்லை? & இது பொதுமக்கள் எழுப்பும் கேள்வி.

100 ஆண்டுகள் தாண்டிய மருத்துவக் கல்லூரிக்கும் இப்படி ஓர் ஆணை என்று சொன்னால் தமிழ்நாடு அரசுக்கு ஓர் களங்கத்தை ஏற்படுத்தும் ஓர் திட்டமாக இருக்குமோ என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

நீட் தேர்வைக் கடுமையாக எதிர்த்து வரும் மாநிலமாக தமிழ்நாடு அரசு இருப்பதால் இப்படிச் சிறு குறைபாடுகளுக்கு பெருந்தண்டனை தரப்படுகிறதோ என்று ஐயமும் எழாமல் இல்லை.

ஆய்வு செய்வது தவறல்ல. ஆனால், அணுகுமுறை நியாயமாக இருக்க வேண்டும் என்பதே நமது வாதம். ஆகவே மனிதாபிமானத்தின் அடிப்படையில் முடிவுகள் அமைய வேண்டும் என்பது அவசியம், அவசரம்.

இது மருத்துவ வளர்ச்சிக்கே குந்தகம் ஏற்படுத்தும் ஒரு செயலாகவே பார்க்கப்படுகிறது. அங்கீகார ரத்து ஆணையால் மருத்துவம் பயில வரும் புதிய மாணவர்களின் கல்விக்குப் பாதிப்பு ஏற்படுத்தி விடக்கூடாது என்ற சமூக அக்கறையால் ஓர் அன்பான வேண்டுகோளை ஆய்வுக் குழு முன் வைப்போம். குற்றங்கள் வேறு; குறைகள் & பிழைகள் வேறு.

குறைகள் – பிழைகள் திருத்தப்பட வேண்டியவை. இங்கே குற்றம் நடக்கவில்லை. பிறகு ஏன் தண்டனை? மேலும் மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரத்தைத் தக்க வைக்க தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

டெல்லிக்கு நேரில் சென்று வலியுறுத்தவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டமிட்டுள்ளார். அதனையும் பரிசீலனை செய்ய மருத்துவ கவுன்சில் முன்வர வேண்டும். எனவே குறைகளை களைந்திட மீண்டும் ஓர் வாய்ப்பு தந்து தடையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆவன செய்யுமா, இந்திய மருத்துவ கவுன்சில்?

படிக்க வேண்டும்

spot_img