fbpx
Homeதலையங்கம்‘பாரத்’ பெயர் மாற்றமும் ‘இந்தியா’ கூட்டணியும்!

‘பாரத்’ பெயர் மாற்றமும் ‘இந்தியா’ கூட்டணியும்!

ஜி20 மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்குப் பதிலாக President of Bharath எனக் குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், நாட்டின் பெயரை இந்தியா என்பதற்கு பதில் ‘பாரத்’ என மாற்ற உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதற்கான முயற்சியில் மத்திய பாஜக அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது வெளிப்படையாகத் தெரிகிறது.

வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் பாரத் என்ற பெயர் மாற்ற தீர்மானம் கொண்டுவர மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான்- &இந்தியா மாநாடு மற்றும் 18வது கிழக்கு ஆசிய மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இந்தோனேசியா செல்ல உள்ள நிலையில், பிரதமர் மோடியின் பயணம் தொடர்பான நிகழ்ச்சி நிரல் அறிவிப்பிலும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அதாவது Prime Minister of Bharat என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கியுள்ளனர். ‘இந்தியா’ என்ற பெயரை கூட்டணிக்கு வைத்துள்ளதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், ‘இந்தியா’ என கூட்டணிக்கு பெயர் வைக்க தடையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில் தான் தற்போது இந்தியா என்ற நாட்டின் பெயரை ‘பாரத்’ என மாற்ற பாஜக அரசு தீவிரமாக முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. இந்தியா என்ற வார்த்தைக்கு மாற்றாக ‘பாரத்’ என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ்ஸின் தொடர் கோரிக்கையாக இருந்து வரும் நிலையில், அதனை இப்போது பாஜக அரசு அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறது. இது எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலங்களில், குறிப்பாக பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் பல நகரங்கள் மற்றும் ஊர்களின் பெயர் மாற்றப்பட்டாலும், 140 கோடி மக்கள் வசிக்கும் ஒரு நாட்டின் பெயரையே மாற்றுவது சாதாரண காரியம் இல்லை.

இந்தியா எனக் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து இடங்களிலும், அம்சங்களிலும், திட்டங்களிலும் ‘பாரத்’ என மாற்றுவதற்கு அதிக செலவு பிடிக்கும். உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக உள்ள இந்தியாவில், எண்ணற்ற கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் இனங்கள் அதன் இயற்பியல் எல்லைகளுக்குள் வசிக்கும் இந்தியா போன்ற ஒரு நாட்டில், நாட்டின் பெயர் மாற்றம் என்பது சிக்கல்கள் நிறைந்தது.

உதாரணத்திற்கு, ‘இந்தியா’ பாரத் என மாறினால், ‘ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா’ என்பதும் பெயர் மாற்றப்படும். அப்படி மாறினால், இந்தியாவில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள், நாணயங்களிலும் பெயர் மாற்றம் அவசியமாகும்.

இந்தியா என்ற பெயரில் உள்ள ஏராளமான திட்டங்களின் பெயர்களும், அறிவிப்புகளும், விளம்பரங்களும் மாற்றப்பட வேண்டும். இதுபோன்ற எண்ணற்ற நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.

இந்தியா -’பாரத்’ பெயர் மாற்றத்திற்காக மிகப்பெரிய தொகையைச் செலவிட வேண்டியிருக்கும். அதாவது 14,304 கோடி ரூபாய் செலவாகக்கூடும். அதாவது, இந்த தொகை 80 கோடி இந்தியர்களுக்கு உணவளிக்கும் உணவுப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக ஒவ்வொரு மாதமும் மத்திய அரசு செலவிடும் தொகைக்கு நிகரானதாகும்.

பாரத் என்ற சொல் அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சொல் தான். அதனை ஏற்பதில் தவறு இல்லை. ஆனால் பெயர் மாற்றம் இவ்வளவு அவசர அவசரமாக செய்யப்பட வேண்டியதன் அவசியம் என்ன வந்தது.

அதற்குக் காரணமே இந்தியா கூட்டணி என்பதாக இருக்கிறதே. நாட்டின் பெயரையே மாற்றும் பின்னணியில் தேசபக்தி இருந்தால் பரவாயில்லை; அரசியல் இருப்பதை நாட்டு மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்-?.

நாட்டு மக்கள் விருப்பத்தைப் பற்றி யார் கவலைப்படுகிறார்கள் என்கிறீர்களா? அதுவும் சரி தான்!

படிக்க வேண்டும்

spot_img